I


வேதத்துக்குப் பொருளருளிச் செய்த படலம்645



     (இ - ள்.) திருவாய் சீதம் மணிமூரல் சிறிது அரும்ப - திருவாயிலே
குளிர்ச்சியும் அழகுள்ள புன்னகை சிறிது தோன்றவும், நாத முடிவாய் - நாத
தத்துவத்தின் முடிவாகியும், அளவு இல் நான்மறையின் அந்தம் -
அளவிடலாகாத நால்வேதங்களின் முடிவில், போத வடிவு ஆகி - ஞான
வடிவாகியும், நின்ற பூரண புராணன் - நிறைந்த பூரணத் தன்மையுடைய
பழையோனாகிய தட்சிணாமூர்த்தி, மாதவர்கள் காண எளி வந்து வெளி
நின்றான் - அம்முனிவர்கள் தரிசிக்கு மாறு எளிதின் வந்து வெளியே
நின்றருளினான் எ - று.

     எளிவந்து : ஒருசொல். நிறை பூரணம் - முழு நிறைவு. புராணன் -
முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம்பொருளானவன். (23)

[அறுசீரடியாசிரியவிருத்தம்]
வட்டவாண்* மதிகண் மார்க்கு +முவாக்கடன் மானமாண்ட
சிட்டரா முனிவர் காளைத் தேசிக வடிவு நோக்கி
ஒட்டறா வுவகை வெள்ள மேற்கொள வுருத்த கூற்றை
அட்டதா மரைதஞ் சென்னிக் கணிமல ராகத் தாழ்ந்தார்.

     (இ - ள்.) உவா வட்டம் வாள் மதி கண்டு ஆர்க்கும் கடல்மான
- உவா நாளிலே வட்டமாகிய ஒள்ளிய திங்களைக் கண்டு முழங்குகின்ற
கடலை ஒப்ப, மாண்ட சிட்டராம் முனிவர் - மாட்சிமைப்பட்ட
பெரியோராகிய முனிவர்கள், காளைத் தேசிக வடிவம் நோக்கி - காளைப்
பருவமுடைய ஆசான் வடிவத்தைக் கண்டு, ஒட்டு அறா உவகைவெள்ளம்
மேற்கொள - வற்றுதலில்லாத மகிழ்ச்சிவெள்ளம் மேலெழ, உருத்த கூற்றை
அட்ட தாமரை - வெகுண்டெழுந்த கூற்றுவனை உதைத்தருளிய திருவடித்
தாமரை, தம் சென்னிக்கு அணிமலராகத் தாழ்ந்தார் - தங்கள் முடிக்குச்
சூடும் மலராக வணங்கினார்கள் எ - று.

     உவாமதி கண்டார்க்கும் கடல் என மாறுக. சிட்டர் - பெரியோர்.
உருத்த - மார்க்கண்டியைச் சினந்த. கூற்றையட்ட என்னும் அடையால்
தாமரை திருவடியை உணர்த்திற்று. தாமரை அணி மலராக அதனை
வணங்கினார்கள் என்க. (24)

அளவறு கலைகட் கெல்லா முறைவிடமாகி வேத
வளைபொரு ளாகி நின்ற வேதிய சரண மென்ற
வளைவுறு மனத்தி னாரைத் தேசிக வள்ள னோக்கிப்
பளகறு தவத்தீர் வேட்கை யாதெனப் பணிந்து சொல்வார்.

     (இ - ள்.) அளவு அறு கலைகட்கு எல்லாம் உறைவிடம் ஆகி -
அளவிறந்த கலைக ளெல்லாவற்றிற்கும் உறையுளாகி, வேத விளைபொருள்
ஆகி நின்ற வேதிய சரணம் என்று - வேதங்களில் விளையும் பொருளாய்
நின்ற வேதியனே அடைக்கலம் என்ற, வளைவு உறு மனத்தினாரை -
வணக்கம் பொருந்திய மனத்தையுடைய முனிவர்களை, வளளல்
தேசிகள்நோக்கி - அருட்கொடையையுடைய குரவன்நோக்கி, பளகு அறு
தவத்தீர் - குற்றமற்ற தவத்தினையுடைய முனிவர்களே, வேட்கை யாது


     (பா - ம்.) * வட்டவான். +உவர்க்கடல்.