I


மாணிக்கம் விற்ற படலம்663



கரைசெ யாப்பெருங் கவலைசூழ் மனத்தராய்க் கறங்கும்
முரசு கண்படாக் கடிமனை முற்றநீத் தருமை
அரசி ளந்தனிக் கொழுந்தினைக் கொண்டுபோ யம்பொன்
வரைசெய் கோபுர வாயின்முன் வருகுவார் வருமுன்.

     (இ - ள்.) கரை செயாப் பெருங் கவலைசூழ் மனத்தராய் - எல்லை
காண முடியாத பெரிய துன்ப நிறைந்த மனத்தினை யுடையவராய், கறங்கும்
முரசு கண்படாக் கடிமனை முற்றம் நீத்து - ஒலிக்கும்முரசு துயிலாத
காவலையுடைய அரண்மனையில் முற்றத்தினின்றும் நீங்கி, அருமை அரசு
இளந்தளிக் கொழுந்தினை - பெறுதற்கரிய அரசனின் ஒப்பற்ற
இளம்புதல்வனை, கொண்டுபோய் - கொண்டு சென்று, அம் பொன் வரைசெய்
கோபுர வாயில்முன் வருகுவார் - அழகிய பொன் மலையைக் கோபுரமாகச்
செய்துவைத்தா லொத்த திருக்கோபுர வாயிலின்முன் வருவா ராயினர்;
வருமுன் - அவர் வருவதற்கு முன் எ - று.

     அரசு என்னும் பெயருக்கேற்ப இளங்கொழுந்து என நயம்படக்
கூறினார். செய் : உவமச் சொல்லுமாம். என்று மொலிக்கு மென்பார்,
‘கண்படா’ என்றார்;

"முழவுங் கண்டுயி லாதது முன்னவன் கோயில்"

என முன்னரும் கூறினமை காண்க; இதனைக் குணவணி என்ப. (11)

எற்ற தும்புகோ வணவுடை யிடம்படப் பிறங்கத்
துற்ற பல்கதிர் மணிப்பொதி சுவன்மிசைத் தூங்க
மற்ற டம்புய வரைமிசை வரம்பிலா விலைகள்
பெற்ற வங்கதம் பரிதியிற் பேர்ந்துபேர்ந் திமைப்ப.

     (இ - ள்.) எல் ததும்பு கோவண உடை - ஒளி மிகுந்த கோவண
மாகப் போக்கிய ஆடையானது, இடம்படப் பிறங்க - விசாலமாக விளங்கவும்,
துற்ற பல்கதிர் மணிப் பொதி சுவல்மிசைத் தூங்க - நெருங்கிய பல
ஒளியினையுடைய அரதனங்களின் பொதி பிடரியின் மேல் தூங்கவும், மல்
தடம் புயவரை மிசை - மற்போருக்குரிய பெரிய தோளாகிய மலையின்மேல்,
வரம்பு இலா விலைகள் பெற்ற அங்கதம் - அளவிறந்த விலைகள்பெற்ற
வாகுவலயம், பரிதியில் பேர்ந்து போர்ந்து இமைப்ப - சூரியனைப் போல
விட்டுவிட்டு ஒளி வீசவும் எ - று.

     துற்ற - நெருங்கிய; துறு : பகுதி; துன்றவுமாம். பொதி - பொதியப்
பட்டது; சுமை. தூங்கல் - தங்குதல், தொங்குதல். விலைகள், கள் :
பகுதிப்பொருள் விகுதி. (12)

மந்தி ரப்புரி நூலது வலம்படப் பிறழ
இந்தி ரத்திரு வில்லென வாரமார் பிலங்கச்
சுந்த ரக்குழை குண்டலந் தோள்புரண் டாடத்
தந்தி ரத்தரு மறைகழி* தாணிலந் தோய.

     (பா - ம்.) * மறைகளி.