(இ
- ள்.) மந்திரப் புரிநூல் வலம்படப் பிறழ - மந்திரத்தா லமைந்த
பூணூலானது வலப்பாலிற் புரளவும், இந்திரத் திருவில் என ஆரம் மார்பு
இலங்க - அழகிய இந்திர வில்லைப்போல அரதன மாலை மார்பில்
விளங்கவும், சுந்தரம் குழைகுண்டலம் தோள்புரண்டு ஆட - அழகிய
குழையும் குண்டலமும் தோளிற் புரண்டு ஆடவும், அருமறை தந்திரத்து கழி
தாள் நிலம் தோய - அரிய வேதங்களின் சூழ்ச்சியினின்றும் நீங்கிய
திருவடிகள் நிலத்திற் பொருந்தவும் எ - று.
புரிநூல்
- மூன்று புரியாக வுள்ள நூல். நூலது, அது : பகுதிப் பொருள்
விகுதி. இந்திரவில்லாகிய திருவில் என்க. குழை, குண்டலம் : சாதி வேற்றுமை; ஒரு பொருள்
குறித்தனவுமாம்; குழையைக் காது என்னின், குழைக் குண்டலம்
என ஒற்று மிகுதல் வேண்டுமென்க. தந்திரம் - தீண்டுதற்குரிய உபாயம்.
தீண்டப்படாது நீங்கியவென்க. களியெனப் பாடமோதிக், களிக்கும்
என்றுரைப்பாரு முளர். (13)
[கலிவிருத்தம்]
|
பொன்னவிர்ந்
திலங்குகோ புரமுன் போதுவார்
முன்னவர் துனிவுகூர் முன்ன நீக்கிய
தென்னவர் குலப்பெருந் தெய்வ மாகிய
மன்னவர் வணிகராய் வந்து தோன்றினார். |
(இ
- ள்.) பொன் அவிர்ந்து இலங்கு கோபுரமுன் போதுவார் முன் -
பொன்னாலாக ஒளிவிட்டு விளங்கும் திருக்கோபுர வாயிலின் முன்
வருகின்றவர்களுக்கு எதிரே, அவர் துனிவு கூர் முன்னம் நீக்கிய -
அவர்களின் துன்ப நிறைந்த எண்ணத்தை ஒழிக்கும் பொருட்டு, தென்னவர்
குலப்பெருந் தெய்வமாகிய மன்னவர் - பாண்டியர்கள் குலத்திற்குப் பெரிய
தெய்வமாகிய சுந்தரேசர், வணிகராய் வந்து தோன்றினார் - வணிகராக வந்து
தோன்றி யருளினார் எ - று.
கூர்
- மிக்க : உரிச்சொல். முன்னம் - குறிப்பு. நீக்கிய : செய்யிய
வென்னும் வாய்பாட்டு வினையெச்சம். (14)
வந்தவ ரெதிர்வரு வாரை மம்மர்கொள்
சிந்தைய ராய்வரு செய்தி யாதென
முந்தையில் விளைவெலா முறையிற் கூறினார்க்
கெந்தையாம் வணிகரீ தியம்பு வாரரோ. |
(இ
- ள்.) வந்தவர் எதிர் வருவாரை - அங்ஙனம் வந்த பெருமானார்
எதிரில் வரும் அமைச்சர் முதலியோரை (நோக்கி), மம்மர்கொள் சிந்தையராய்
வருசெய்தி யாது என - மயங்கிய மனத்தினராய் நீவிர் வரும் செய்தி
யாதென்று வினவ, முந்தையில் விளைவு எலாம் முறையில் கூறினார்க்கு -
முன் நிகழ்ந்த செய்திக ளனைத்தையும் முறைப்படி கூறிய அவர்களுக்கு,
எந்தையாம் வணிகர் ஈது இயம்புவார் - எம் தந்தையாகிய வணிகர்
பெருமானார் இதனைக் கூறுவார் எ - று.
முந்தை
- முன்பு; இல் : ஏழனுருபு. எந்தையாம் வணிகர் : ஒருமையிற்
பன்மை வந்தது. அரோ : அசை. (15)
|