குருவிந்தந் தரிப்பவர்பார் முழுதுமொரு
குடைநிழலிற் குளிப்ப வாண்டு
திருவிந்தை யுடனிருப்பர் சௌகந்தி
கந்தரிப்போர் செல்வங் கீர்த்தி
மருவிந்தப் பயனடைவர் கோவாங்கந்
தரிப்போர்தம் மனையியற் பாலும்
பெருவிந்த மெனச்சாலி முதற்பண்ட
முடன்செல்வப் பெருக்கு முண்டாம். |
(இ
- ள்.) குருவிந்தம் தரிப்பவர் பார் முழுதும் ஒரு குடை நிழலில்
குளிப்ப ஆண்டு - குரு விந்தத்தினை அணிகின்றவர் நிலவுலக முற்றும்
தமது ஒரு குடை நிழலின் கீழ்த் தங்க அரசாண்டு, திருவிந்தை உடன்
இருப்பர் - திருமகளோடும் வீரமகளோடுங் கூடியிருப்பர்; சௌகந்திகம்
தரிப்போர் - சௌகந்திகத்தினை அணிவோர், செல்வம் கீர்த்தி மருவு இந்தப்
பயன் அடைவர் - செல்வமும் புகழுமாகிய பொருந்திய இந்தப் பயன்களை
யடைவார்; கோவாங்கம் தரிப்போர் தம் மனையில் - கோவாங்கத்தினை
அணிவோரின் வீட்டில், பாலும் பெரு விந்தம் என சாலி முதல் பண்டமுடன்
செல்வப் பெருக்கும் உண்டாம் - பாலும் பெரிய விந்த மலையைப் போல
நெல் முதலிய பல பண்டங்களின் குவைகளோடு செல்வப் பெருக்கமும்
உண்டாகும் எ - று.
நிழலின்
கீழிருத்தலை 'நிழலிற் குளிப்ப' என்றார். திருவுடனும்
விந்தையுடனும் என்க. (42)
எள்ளியிடு குற்றமெலா மிகந் துகுண
னேற்றொளிவிட் டிருள்கால் சீத்துத்
தள்ளியவிச் செம்பதும ராகமது
புனைதக்கோர் தம்பா லேனைத்
தெள்ளியமுத் துள்ளிட்ட பன்மணியும்
வந்தோங்குஞ் செய்யா ளோடும்
ஒள்ளியநற் செல்வமதற் கொப்பநெடும்
பாற்கடலி னோங்கு மானே. |
(இ
- ள்.) எள்ளியிடு குற்றம் எலாம் இகந்து - விலக்கப்பட்ட
குற்றங்களெல்லாவற்றினின்றும் நீங்கி, குணன் ஏற்று ஒளிவிட்டு இருள் கால்
சீத்துத் தள்ளிய - சிறந்த குணங்களைத் தன்னகத்தே கொண்டு ஒளி வீசி
இருளைப் பற்றறக் கெடுத்துப் போக்கிய, இ செம்பதும ராகமது புனை
தக்கோர் தம்பால் - இந்தச் சிவந்த பதுமராக மணியை அணிகின்ற
தக்கோரிடத்து, ஏனை தெள்ளிய முத்து உள்ளிட்ட பல் மணியும் வந்து
ஓங்கும் - மற்றைச் சிறந்த முத்து முதலிய பல மணிகளும் வந்து பெருகும்;
அதற்கு ஒப்ப - அதற்குப் பொருந்த, செய்யாளோடும் ஒள்ளிய நல்
செல்வம் -திருமகளோடும் புகழைத் தருவதாகிய நல்ல செல்வமும்,
நெடும்பாற்கடலின் ஓங்கும் - நெடிய பாற்கடலைப் போல வளரும் எ - று.
|