I


மாணிக்கம் விற்ற படலம்683



சாத்தி, இன்பு உற நினைந்து - இன்ப மிகச் சிந்தித்து இயல் முறை வழாது -
விதி முறை வழுவாமல், பூசை செய்தல் - பூசனை புரிக எ - று.

     ஏற்றுதல் - ஆவாகித்தல். செய்தல் - செய்க : அல்லீற்று வியங்கோள்.
மாணிக்கம் ஞாயிற்றுக்கும், முத்து திங்களுக்கும், பவழம் செவ்வாய்க்கும்,
மரகதம் புதனுக்கும், புட்பராகம் வியாழனுக்கும், வயிரம் வெள்ளிக்கும், இந்திர
நீலம் சனிக்கும், கோமேதம் இராகுவுக்கும், வைடூரியம் கேதுவுக்கும் மகிழ்ச்சி
தருவன என்று சுக்கிரநீதியுட் கூறப்பட்டுளது.* (52)

தக்கமுத் திரண்டு வேறு தலசமே சலச மென்ன
இக்கதிர் முத்தந் தோன்று மிடன்பதின் மூன்று சங்கம்
மைக்கரு முகில்வேய் பாம்பின் மத்தகம் பன்றிக் கோடு
மிக்கவெண் சாலி யிப்பி மீன்றலை வேழக் கன்னல்.

     (இ - ள்.) தக்க முத்து தலசமே சலசமே என்ன இரண்டு வேறு -
குற்றமில்லாத முத்துக்கள் தலசமென்றும் சலசமென்றும் இரண்டு வகைப்படும்;
இ கதிர் முத்தம் தோன்றும் இடன் பதின்மூன்று - இந்த ஒளியையுடைய
முத்துக்கள் தோன்றும் இடம் பதின்மூன்றாம்; சங்கம் மைக்கரு முகில் வேய்
பாம்பின் மத்தகம் பன்றிக்கோடு - சங்கும் மிகக் கரிய முகிலும் மூங்கிலும்
அரவின் தலையும் பன்றிக் கொம்பும், மிக்க வெண்சாலி இப்பி மீன் தலை
வேழக் கன்னல் - மிகுந்த வெண்ணெல்லும் சிப்பியும் மீனினது தலையும்
வேழக்கரும்பும் எ - று.

     தலசம் - நிலத்திற்றோன்றுவது. சலசம் - நீரிற்றோன்றுவது. தலசமே :
ஏகாரம் எண்ணுப் பொருட்டு. என்ன இரண்டு வேறாம் என்க. வேழக்
கன்னல் - வேழமாகிய கன்னல் : இருபெயரொட்டு; வேழம் - கரும்பின் ஒரு
வகை. இச்செய்யுளை வருஞ் செய்யுளோடு ஒரு தொடராக்கி, தோன்றுமிடன்
கொக்கின் கண்டம் எனப்பதின் மூன்றாம் என முடிக்க. (53)

கரிமருப் பைவாய் மான்கை கற்புடை மடவார் கண்டம்
இருசிறைக் கொக்கின் கண்ட மெனக்கடை கிடந்த மூன்றும்
அரிபன வாதிப் பத்து நிறங்களு மணங்குந் தங்கட்
குரியன நிறுத்த வாறே யேனவு முரைப்பக் கேண்மின்.

     (இ - ள்.) கரிமருப்பு ஐவாய் மான்கை கற்புடை மடவார் கண்டம் -
யானையின் தந்தமும் சிங்கத்தின் கையும் கற்புடை மகளிரின் கழுத்தும், இரு
சிறைக் கொக்கின் கண்டம் என - இரண்டு சிறைகளையுடைய கொக்கின்
கழுத்தும் என்று; கடை கிடந்த மூன்றும் அரியன ஈற்றிற் கூறிய மூவகையும்
கிடைத்தற்கரியன; ஆதிப்பத்து நிறங்களும் - முதற்கண் உள்ள பத்து வகை
முத்துக்களின் நிறங்களும் தங்கட்கு உரியன அணங்கும் - அவற்றிற்கு
உரியவாகிய தெய்வங்களும், ஏனவும் - பிறவும், நிறுத்தவாறே உரைப்பக்


     * பண்டிதர், மு. கதிரேசச் செட்டியாரவர்கள் மொழி பெயர்த்த
'சுக்கிர நீதி' 185, 186 ஆம் பக்கங்களிற் காண்க.