I


மாணிக்கம் விற்ற படலம்685



     ஈர்ஞ்சுவை, 'மெல்லெழுத்து மிகுதல் மெய் பெறத் தோன்றும்' என்பதன்
இலேசால் மெலிமிக்கது. ஆனது, முதல் வேற்றுமைச் சொல். வேழம் -
யானை, கரும்பு. தான், அது என்பன அசைகள். (56)

பான்முத்தம் வருணன் முத்தம்
     பகன்முத்தம் பகலோன் முத்தம்
மான்முத்த நீல முத்த
     மாசறு குருதி முத்தங்
கான்முத்தம் பசிய முத்தங்
     காலன்றன் முத்தந் தேவர்
கோன்முத்தம் பொன்போன் முத்தங்
     குணங்களும் பயனுஞ் சொல்வாம்.

     (இ - ள்.) பால் முத்தம் வருணம் முத்தம் - பால் போன்ற வெள்ளிய
முத்தங்கள் வருணனுக்குரிய முத்தங்களாகும்; பகல் முத்தம் பகலோன்
முத்தம் - சூரியன் போன்று செந்நிறம் வாய்ந்த முத்தங்கள் சூரியனுக்குரிய
முத்தங்களாகும்; நீல முத்தம் மால் முத்தம் - நீல நிறமுடைய முத்தங்கள்
திருமாலுக்குரிய முத்தங்களாகும்; மாசுஅறு குருதி முத்தம் கால் முத்தம் -
குற்றமற்ற குருதி நிறத்தினையுடைய முத்தங்கள் வாயு தேவனுக்குரிய
முத்தங்களாகும்; பசிய முத்தம் காலன் முத்தம் - பசிய நிறத்தினையுடைய
முத்தங்கள் கூற்றுவனுக்குரிய முத்தங்களாகும்; பொன் போல் முத்தம் -
பொன்னைப் போலும் நிறம் வாய்ந்த முத்தங்கள், தேவர்கோன் முத்தம் -
தேவேந்திரனுக்குரிய முத்தங்களாகும்; குணங்களும் பயனும் சொல்வாம் -
(இனி) அவற்றின் குணங்களையும் அணிவோரடையும் பயனையும் கூறுவோம்
எ - று.

     கால் காற்றுத் தெய்வம். தன் : சாரியை. (57)

உடுத்திர ளனைய காட்சி யுருட்சிமா சின்மை கையால்
எடுத்திடிற் றிண்மை பார்வைக் கின்புறல் படிக மென்ன*
அடுத்திடு குணமா றின்ன வணியின்மூ தணங்கோ டின்மை
விடுத்திடுந் திருவந் தெய்தும் விளைந்திடுஞ் செல்வம் வாழ்நாள்.

     (இ - ள்.) உடுத்திரள் அனைய காட்சி - உடுக் கூட்டத்தினை ஒத்த
தோற்றமும், உருட்சி - திரட்சியும், மாசு இன்மை - குற்றங்களில்லாமையும்,
கையால் எடுத்திடில் திண்மை - கையினால் எடுத்தால் திண்ணென்றிருத்தலும்,
பார்வைக்கு இன்புறல் - நோக்கத்திற்கு இன்பஞ் செய்தலும், படிகம் - படிகம்
போன்று தெளிந்திருத்தலும், என்ன அடுத்திடு குணம் ஆறு - என்று
பொருந்திய குணங்கள் ஆறாகும்; இன்ன அணியின் மூதணங்கோடு இன்மை
விடுத்திடும் - இம் முத்துக்களை அணிந்தால் (அணிவோரைத்) தவ்வையும்
வறுமையும் (விட்டு) நீங்கும்; திருவந்து எய்தும் - திருமகள் வந்து சேருவாள்;
செல்வம் வாழ்நாள் விளைந்திடும் - செல்வமும் வாழ்நாளும் மிகும் எ - று.


     (பா - ம்.) * புடிதமென்ன.