I


698திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



வலன்மயிராம் வயிடூய மிளாவிருத
     கண்டத்தில் வந்து தோன்றிப்
பலர்புகழுங் கோரக்க மகதஞ்சிங்
     களமலயம் பார சீகம்
இலகுதிரி கூடாதி தேயங்கள்
     பிறதீப மெங்குந் தோற்றும்
அலைகடலும் படுமிறுதிக் காரிடிக்கும்
     போதுநிற மதற்கியா தென்னில்.

     (இ - ள்.) வலன் மயிராம் வயிடூயம் இளாவிருத கண்டத்தின் வந்து
தோன்றி - வலன் மயிராகிய வயிடூரியமானது இளாவிருத கண்டத்திற்றோன்றி,
பலர் புகழும் கோரக்கம் மகதம் சிங்களம் மலயம் பாரசீகம் - பலரும்
புகழுகின்ற கோரக்கத்திலும் மகதத்திலும் சிங்களத்திலும் பொதியின்
மலையிலும் பாரசீகத்திலும், இலகு திரி கூடாதி தேயங்கள் - விளங்கா நின்ற
திரிகூடம் முதலான தேயங்களிலும், பிற தீபம் எங்கும் - வேறு
தீவுகளனைத்திலும்; தோற்றும் - உண்டாகும்; அலை கடலும் இறுதிக்கார்
இடிக்கும் போதும் படும் - அலைகின்ற கடலிலும் ஊழிக்காலத்தில் முகில்
இடிக்கும் பொழுதிலும் தோன்றும்; அதற்கு நிறம் யாது என்னில் -
அம்மணிக்கு ஒளி யாதென்றால் எ - று.

     ஊழிக்காலத்து மேகம் முழங்கும் பொழுது அலைகின்ற கடலிலும் படும்
என ஒன்றாக்கியுரைத்தலுமாம். (78)

கழையிலைகார் மயிலெருத்தம் வெருகின்கண்
     ணிறத்ததாய்க் கனத்த தாகி
விழைவுதரு தெளிதாகித் திண்ணிதாய்
     மெலிதாகி விளங்கு மீதில்
அழகுபெற வலமிடமேல் கீழொளிவிட்
     டனமுறையே யறவோ ராதித்
தழைவுறுநாற் சாதிகளாந் தினமிதனைப்
     பூசித்துத் தரிக்க சான்றோர்.

     (இ - ள்.) கழை இலை கார் மயில் எருத்தம் வெருகின் கண்
நிறத்ததாய் - மூங்கில் இலையும் கரிய மயிலின் கழுத்தும் பூனையின்
கண்ணுமாகிய இவற்றின் நிறத்தையுடையதாய், கனத்தது ஆகி -
கனமுடையதாய், விழைவுதரு தெளிதாகி - விருப்பத்தைத் தரும்
தெளிவுள்ளதாகி, திண்ணிது ஆய் - திண்மையுடையதாய், மெலிதாகி
விளங்கும் - மென்மைத் தன்மையுடையதாய் விளங்கா நிற்கும்; ஈதில் -
இம்மணியில், வலம் இடம் மேல் கீழ் ஒளி விட்டன - வலத்தினும் இடத்திலும்
மேலும் கீழும் ஒளி வீசுவன, முறையே - முறையாக, அறவோர் ஆதி -
அந்தணர் முதலான, தழைவு உறு நால்சாதிகளாம் - செழிப்பினையுடைய
நான்கு வருணங்களாம்; சான்றோர் இதனைத் தினம் பூசித்து தரிக்க -
அறிவுடையோர் நாளும் இம்மணியைப் பூசித்து அணியக் கடவர் எ - று.