I


மாணிக்கம் விற்ற படலம்705



ஏத்திவலங் கொண்டிருநான் கிபந்தழுவப்
     பெற்றோங்கி யிருக்கு மட்ட
மூர்த்திவிடை யருள்பெற்று மூவாநன்
     மறையாசி முனிவர் கூறப்
பார்த்திவன்றன் பொலன்மாட மனைபுகுந்தா
     னிறைமணிப்பண் பாயுங் கேள்விச்
சாத்திரரு மந்திரரு மணிநோக்கி
     வியப்படைந்தார் சங்கை கூர்ந்தார்.

     (இ - ள்.) பார்த்திவன் - அரச குமாரன், ஏத்தி வலம் கொண்டு -
துதித்து வலம் வந்து, இருநான்கு இபம் தழுவப் பெற்று ஓங்கி இருக்கும்
அட்டமூர்த்தி - எட்டு யானைகளாற் சுமக்கப் பெற்று வீற்றிருக்கும்
அட்டமூர்த்தியாகிய சொக்கலிங்கப் பெருமானின், விடை அருள் பெற்று -
அருள் விடை பெற்று, மூவா நல்மறை முனிவர் ஆசி கூற - அழியாத சிறந்த
மறைகளை உணர்ந்த அந்தணர்கள் வாழ்த்துக் கூற, தன் பொலன்மாட மனை
புகுந்தான் - தனது பொன்னாலாகிய மேன் மாடத்தையுடைய கோயிலிற்
புகுந்தான்; நிறைமணிப் பண்பு ஆயும் கேள்விச் சாத்திரரும் - இலக்கணம்
நிரம்பிய மணிகளின் குணங்களை ஆராயும் நூற்கேள்வி வல்லுநரும்,
மந்திரரும் - அமைச்சரும், மணி நோக்கி வியப்பு அடைந்தார் - மணிகளைப்
பார்த்து வியப்புற்று, சங்கை கூர்ந்தார் - ஐயங்கொண்டவர்களாய் எ - று.

     'என்னாமுன்வழுத்தலுறும்' என்பதனுள், 'என்னா' என்பதனுடன் 'ஏத்தி'
என்பதனை இயைத்துரைக்க. தழுவப்பெற்ற விமானத்தில் இருத்தலைத்
'தழுவப் பெற்றிருக்கும்' என்றார். அட்டமூர்த்தி - நிலம், நீர், தீ, வளி,
விசும்பு, நிலா, பகலோன், இயமானன் என்னும் எட்டுருவாயவன். அருள்
விடையென மாறுக. நிறை பண்பு என இயைத்தும், இறைமணி எனப் பிரித்தும்
உரைத்தலுமாம். சாத்திரக் கேள்வியர் என விகுதி பிரித்துக் கூட்டுக;
கேள்வியும் சாத்திரமும் ஒரு பொருட் சொற்களுமாம். அடைந்தார், கூர்ந்தார்
என்பன முற்றெச்சங்கள். சங்கை கூர்தலை வருஞ்செய்யுளிற் காண்க. (88)

[- வேறு]
வேளென வந்த நாய்கர் சுந்தர விடங்க ரானால்
நாள்களும் கோளும் பற்றி நவமணி யாக்கி னாரோ
தாள்களுந் தோளு மார்புந் தரித்தநீ ணாக மீன்ற
வாள்விடு மணியோ வீந்தார் யாதென மதிக்கற் பாலேம்.

     (இ - ள்.) வேள் என வந்த நாய்கர் சுந்தர விடங்கர் ஆனால் -
முருக வேளைப் போல வந்த வணிகர் சோமசுந்தரக் கடவுளானால் (அவர்),
நாள்களும் கோளும் பற்றி நவமணி ஆக்கினாரோ - நாண் மீன்களையும்
கோள்களையும் பிடித்து நவமணிகளாகச் செய்து நல்கியருளினாரோ (அன்றி),
தாள்களும் தோளும் மார்பும் தரித்த - திருவடிகளிலும் திருத்தோள்களிலும்
மார்பிலும் அணிந்த, நீள் நாகம் ஈன்ற வாள் விடும் மணி ஈந்தாரோ - நீண்ட