I


706திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



பாம்புகள் கான்ற ஒளி வீசும் மணிகளைத் தந்தருளினாரோ, யாது என
மதிக்கற்பாலேம் - யாதென்று கருதும் பகுதியையுடையேம் எ - று.

     சுந்தரவிடங்க ரென்பது உண்மையாயின் அவர் இவை செயற்பால
ரென்பார், 'விடங்கரானால்' என்றார். ஈந்தார் என்பதனை முன்னுங் கூட்டி
ஆக்கி யீந்தாரோ என்க. மணியோ ஈந்தார் என்பதில் ஒகாரம் பிரித்துக்
கூட்டப்பட்டது. சங்கை கூர்ந்து இங்ஙனங் கூறியென்க. (89)

இந்திரக் கடவு ணாட்டு மிம்மணி யரிய வென்னா
மந்திரக் கிழவர் நல்கி மயனினு மாண்ட கேள்வித்
தந்திரக் கனகக் கொல்லர்க் குவப்பன ததும்ப வீசிச்
செந்திரு மார்பி னாற்குத் திருமணி மகுடஞ் செய்தார்.

     (இ - ள்.) இந்திரக் கடவுள் நாட்டும் இம்மணி அரிய என்னா -
இந்திரனது உலகத்திலும் இம் மணிகள் கிடைத்தற்கரியன என்று வியந்து,
மந்திரக் கிழவர் - சூழ்ச்சிக்குரிய அமைச்சர், மயனினும் மாண்ட கேள்வித்
தந்திரக் கனகக் கொல்லர்க்கு உவப்பன ததும்ப வீசி - மயனைக் காட்டிலும்
மாட்சிமையுடைய சிற்ப நூலில் வல்ல பொற்கொல்லருக்கு அவர்
உவப்பானவாய பல வரிசைகளை நிறைய அளித்து, நல்கி - (அம்மணிகளைக்)
கொடுத்து, செந்திரு மார்பினாற்குத் திருமணி மகுடம் செய்தார் - சிவந்த
திருமகள் தங்கும் மார்பினையுடைய அரச குமாரனுக்குத் தெய்வத் தன்மை
பொருந்திய மணிகளழுத்திய முடியினைச் செய்வித்தனர் எ - று.

     இந்திரனாகிய கடவுள் என இருபெயரொட்டு; இந்திரனது கடவுள் நாடு
எனக் கொண்டு உயர்திணைப் பெயர் விகாரமாயிற்று எனலுமாம். சாத்திரரும்
மந்திரரும் அரிய வென்னா வியந்தார் என முடித்து, அவருள் மந்திரர்
மகுடஞ் செய்தார் என்க. தந்திரக் கேள்வி என மாறுக. செய்தார் :
பிறவினைப் பொருட்டு. (90)

மங்கல மரபான் மாலை மணிமுடி சூட்டி நாமஞ்
செங்கணே றுயர்த்த நாய்கர் செப்பிய முறையால் வேத
புங்கவ ரிசைப்ப வீதி வலஞ்செய்து புனிதன் பாத
பங்கய மிறைஞ்சி வேந்தன் பன்மணிக் கோயி லெய்தா.

     (இ - ள்.) மங்கல மரபால் - மங்கல முறைமையால், மாலை மணி
முடிசூட்டி - மாலையையணிந்த மணிமகுடத்தை அணிவித்து, செங்கண் ஏறு
உயர்த்த நாய்கர் செப்பிய முறையால் - சிவந்த கண்ணையுடைய இடபத்தைக்
கொடியாக உயர்த்திய வணிகர் கூறிய முறைப்படி, வேத புங்கவர் நாமம்
இசைப்ப - மறைகளையுணர்ந்த அந்தணர் அபிடேக பாண்டியனென்று பெயர்
கூற, வேந்தன் - அவ்வரசன், வீதி வலம் செய்து - வீதியை வலம் வந்து,
புனிதன் பாத பங்கயம் இறைஞ்சி - தூயனாகிய சோமசுந்தரக் கடவுளின்
திருவடித் தாமரைகளை வணங்கி, பல்மணிக் கோயில் எய்தா - பல
மணிகளழுத்திய அரண்மனையிற் சென்று எ - று.