I


716திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



இமையவர் மேல் வரும் பொழுது - நஞ்சானது பாற்கடலினின்றும் தோன்றிக்
கொல்லுதற்குத் தேவர்மேல் வருங்காலத்தில், அஞ்சும் மால் எனவும் -
அஞ்சுதலுற்ற திருமாலைப் போலவும், தன் உயிர் மேல் மறலி வரும்பொழுது
அஞ்சும் பாலன் எனவும் - தனது உயிரின் மேல் கூற்றுவன் வரும் பொழுது
அஞ்சிய மார்க்கண்டனைப் போலவும், கலங்கி - மனங்கலங்கி, பசுபதி
சேவடியில் விழுந்து ஓலமென முறையிட்டான் - உயிர்களுக்கு
இறைவனாயுள்ள சோமசுந்தரக் கடவுளின் சிவந்த திருவடிகளில் விழுந்து
ஓல மென்று முறையிட்டான் எ - று.

     ஆலத்தினையும் மறலியையும் போன்று வரும் வெள்ளத்தின்
கொடுமையையும், அரசன் புறவுயிர்க்கும் தன்னுயிர்க்கும் அஞ்சும்
அச்சத்தையும், அவனது அன்பின் மிகுதியையும், இறைவன்பால் அடைக்கலம்
புகுந்து காப்பாற்றப்படுதலையும் உணர்த்தத் திருமாலையும்,
மார்க்கண்டனையும் உவமை கூறினார். அஞ்சுதல், கலங்குதல், சேவடியில்
விழுந்து முறையிடல், இவற்றை மூவர்க்குங் கொள்க. புகழும் புகழாகிய
உறையென விரிக்க; உலகிற்குப் புகழாகிய உறையினையிட்டான் எனலுமாம்;
இதற்கு உலக முழுதும் தன் புகழ் பரக்கவென்பது கருத்து. ஈற்றடியில்
முறையிட்டான் உறையிட்டான் என இயைபு நயம் அமைந்துளது. (16)

முறையிட்ட செழியனெதிர் முறுவலித்தஞ் சலையென்னாக்
கறையிட்டு விண்புரந்த கந்தரசுந் தரக்கடவுள்
துறையிட்டு வருகடலைச் சுவறப்போய்ப் பருகுமெனப்
பிறையிட்ட திருச்சடையியற் பெயனான்கும் வரவிடுத்தான்.

     (இ - ள்.) முறையிட்ட செழியன் எதிர் - அங்ஙனம் முறையிட்ட
பாண்டியன் எதிரே, கறை இட்டு விண்புரந்த கந்தரசுந்தரக் கடவுள் - நஞ்சக்
கறையைப் பொருந்தித் தேவர்களைக் காத்தருளிய திருமிடற்றினையுடைய
சோமசுந்தரக் கடவுள், முறுவலித்து - புன்னகை புரிந்து, அஞ்சலை என்னா -
அஞ்சாதே என்றருளி, துறை இட்டு வருகடலை - பல துறைகளையிட்டு
வருகின்ற கடலை, சுவறப் போய்ப் பருகும் என - அது வற்றுமாறு போய்
உண்ணுங்கள் என்று, பிறை இட்ட திருச்சடையில் பெயல் நான்கும்
வரவிடுத்தான் - குழவித்திங்களையணிந்த திருச்சடையிலுள்ள முகில்
நான்கனையும் செல்லவிட்டான் எ - று.

     புரந்தமை சுந்தரத்திற்கேற்றி யுரைக்கப்பட்டது. கந்தரத்தினது
சுந்தரத்தையுடைய என்பதோர் பொருள் தோன்றுமாறும், கந்தர சுந்தரம்
என்னும் சொல்லழகும் நோக்குக. பெயல் - பெய்தலையுடைய
முகிலுக்காயிற்று. (17)

[அறுசீரடி யாசிரிய விருத்தம்]
நிவப்புற வெழுந்த நான்கு மேகமு நிமிர்ந்து வாய்விட்
டுவர்ப்புறு கடலை வாரி யுறிஞ்சின வுறிஞ்ச லோடுஞ்
சிவப்பெருங் கடவுள் யார்க்குந் தேவெனத் தெளிந்தோ ரேழு
பவப்பெரும் பௌவம் போலப் பசையற வறந்த தன்றே.