(இ
- ள்.) நிவப்புற எழுந்த நான்கு மேகமும் - உயர எழுந்த அந்
நான்கு முகில்களும், நிமிர்ந்து வாய்விட்டு - நிமிர்ந்து முழங்கி, உவர்ப்பு
உறு கடலை வாரி உறிஞ்சின - உவர்ப்பினையுடைய கடல் நீரை அள்ளி
உறிஞ்சின; உறிஞ்சலோடும் - அங்ஙனம் உறிஞ்சினவளவில் (அக்கடல்) சிவப்
பெருங் கடவுள் யார்க்கும் தேவு எனத் தெளிந்தோர் - சிவமாகிய பெரிய
கடவுளே யாவருக்கும் தேவனெனத் தெளிந்தவர்களின், ஏழு பவப் பெரும்
பௌவம் போல - எழுவகைப்பட்ட பிறவியாகிய பெரிய கடல் வற்றுதல்
போல, பசை அற வறந்தது - பசையின்றாக வற்றியது எ - று.
உறிஞ்சுதல்
- உட்புக இழுத்தல். கடவுளேயெனப் பிரிநிலையேகாரம்
வருவித்துரைக்க. தெளிந்தோராவர் ஐயமின்றித் துணிந்தவர் என்க. "ஐயத்தி
னீங்கித் தெளிந்தார்க்கு." என்பது தமிழ் மறை.
யார்க்கும் என்றது,
அயன்மால் உள்ளிட்ட தேவர்க்கும் என்றவாறு;
"பாவ காரிகள்
பார்ப்பரி தென்பரால்
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே." |
எனத் திருநாவுக்கரசர்
இரங்கிக் கூறுதல் காண்க. 'மறை முதற்கலைக
ளெல்லாம் மணிமிடற்றவனே யெங்கும், நிறைபரமென்றும்.................அறைகுவது'
என இவ்வாசிரியர் முன் கூறினமையும் நோக்குக. அன்று ஏ : அசைகள். (18)
அந்நிலை நகரு ளாரும் வானவ ராதி யோருந்
தென்னவர் பிரானு மெந்தை திருவிளையாட னோக்கிப்
பன்னரு மகிழ்ச்சி பொங்கப் பன்முறை புகழ்ந்து பாடி
இன்னறீர் மனத்த ராகி யீறிலா வின்பத் தாழ்ந்தார். |
(இ
- ள்.) அ நிலை - அப்பொழுது, நகருளாரும் வானவர்
ஆதியோரும் - நகரத்திலுள்ளாரும் தேவர் முதலானவர்களும், தென்னவர்
பிரானும் - பாண்டியர்கள் தலைவனாகிய அபிடேக பாண்டியனும், எந்தை
திருவிளையாடல் நோக்கி - எம் தந்தையாகிய சோமசுந்தரக் கடவுளின்
திருவிளையாடலைப் பார்த்து, பன் அரும் மகிழ்ச்சி பொங்க -
சொல்லுதற்கரிய மகிழ்ச்சி மிக, பல் முறை புகழ்ந்து பாடி - பல முறை
புகழ்ந்து துதித்து, இன்னல் தீர் மனத்தராகி - துன்ப நீங்கிய
மனத்தினையுடையயராய், ஈறு இலா இன்பத்து ஆழ்ந்தார் - முடிவில்லாத
இன்ப வெள்ளத்தில் மூழ்கினார்கள் எ - று.
அன்பு
ஆராமையாற் பாடினாரென்பார். 'பன்முறை புகழ்ந்து பாடி'
என்றார். ஆழ்ந்தார் என்றமையால் இன்பமாகிய வெள்ளத்தில் என
விரிக்கப்பட்டது; கடல் வெள்ளமும் அதனாலாய துன்ப வெள்ளமும் ஒழிய
இன்ப வெள்ளத்தில் மூழ்கினார் என்பது தோன்ற, 'இன்னல் தீர் மனத்தராகி
யீறிலா வின்பந் தாழ்ந்தார்' என்றார். (19)
ஆகச்
செய்யுள் 1306.
மதுரைக்காண்டம்
முற்றிற்று.
|