I


திருநகரச் சிறப்பு73



     (இ - ள்.) தண்பணை - குளிர்ந்த மருத நிலங்களில், நெல் கரும்பு
என - நெய்பயிர்கள் கரும்புகள் எனவும், கரும்பு உலாம் - கரும்புகள்
அனைத்தும், நெடு கமுகு என - நீண்ட கமுக மரங்கள் எனவும், வர்க்கம்
வான் கமுகு - இனமாகிய உயர்ந்த கமுகமரங்கள், ஒலிகலித் தெங்கு என
- தழைத்த நெருக்கிய தென்னை மரங்கள் எனவும், வளர்ந்த - ஓங்கிய,
பொன்கவின் குலைத்தெங்கு - பொன்போலும் அழகிய குலைகளையுடைய
தென்னைமரங்கள், கார்ப்பந்தரை - முகிலாகிய பந்தரை, பொறுத்து நிற்கு -
சுமந்து நிற்பதற்கு, நாட்டிய கால் என - நாட்டப் பட்ட கால்கள் எனவும்
(கருதும்படி), நிவந்த - உயர்ந்துள்ளன எ - று.

     ஒலி - தழைத்தல்; இஃதிப்பொருட்டாதலை ‘ஒலி நெடும்பீலி’ என
நெடுநல்வாடையினும், வணரொலியையும் பாலாய்’ எனக் கார்நான்பதினும்
வருதலானறிக. கலி - செருக்குதல்; இதனை, மலைபடுகடாத்துள்,

"தீயி னன்ன வொண்செங் காந்தட்
டுவற்கலிதத புதுமுகை"

என்பத னுரையானறிக. வளர்ந்த வென்பது தெங்கிற்கு அடை. நிவந்த,
அன்பெறாத பலவின்பால் முற்று. தண்பணை யென்பதில் ஏழனுருபு
இறுதிக்கட் டொக்கது;

"ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின்
மெய்யு ருபுதொகா விறுதி யான"

என்பது தொல்காப்பியம். ஏ, அசை. (6)

சிவந்த வாய்க்கருங் கயற்கணாள் வலாரியைச் சீறிக்
கவர்ந்த வான்றருக் குலங்களே கடிமணம் வீசி
உவந்து வேறுபல் பலங்களும் வேண்டினர்க் குதவி
நிவந்த காட்சியே போன்றது நிழன்மலர்ச் சோலை.

     (இ - ள்.) நிழல் மலர்ச்சோலை - குளிர்ந்த மலர்களையுடைய
சோலைகளின் (தோற்றம்), சிவந்தவாய் - சிவந்தவாயினையும், கரும் கயல்
கணாள் - கரிய கயல்மீன்போலும் கண்களையுமுடைய தடாதகைப்
பிராட்டியார், வலாரியைச் சீறிக் கவர்ந்த - இந்திரனைக் கோபித்துக்
கொணர்ந்த, வான்தருக் குலங்களே - உயர்ந்த பஞ்சதருக் கூட்டங்களே,
கடிமணம் வீசி - மிக்க மணத்தினை வீசி, வேண்டினர்க்கு - குறை
யிரந்தார்க்கு, வேறு பல் பலங்களும் - வேறாகிய பல பயன்களையும்,
உவந்து உதவி - மகிழ்ந்து கொடுத்து, நிவந்த - உயர்ந்துள்ள, காட்சியே
போன்றது - தோற்றத்தையே ஒத்தது எ - று.

     வலாரி - வலன் என்னும் அசுரனுக்குப் பகைவன் இந்திரன்.
தருக்கள் : சந்தானம், அரிசந்தனம, மந்தாரம், பாரிசாதம், கற்பகம் என்பன.
குலம் - கூட்டம். கடிமணம் - மிக்க மணம் : ஒருபொருளிருசொல். வேறு
வானுலகத்து வழங்கிய ஆடை அணி முதலியவற்றின் வேறாகிய; வெவ்வேறு
பல என்னலுமாம். பலம் - பழம்; பழம் என்னும் தமிழ்ச்சொல் நெடுநாளின்
முன் ஆரியத்திற் பலமெனத் திரிந்தேறியது. ஏ : இரண்டும் பிரிநிலை.
தடாதகைப் பிராட்டியார் இந்திரனைச் சீறித் தருக்களைக் கவர்ந்து
வந்ததனை இப்புராணத்தே திருமணப்படலத்திற் காண்க. (7)