எறியும் வாளையு மடிக்கடி யெழுந்துடல் பரப்பிப்
பறியு மாமையும் வாளொடு கேடகம் பற்றிச்
செறியு நாண்மல ரகழியுஞ் சேண்டொடு புரிசைப்
பொறியு மேயன்றி *யுடன்றுபோர் புரிவது+போலும். |
(இ
- ள்.) அடிக்கடி எழுந்து - அடிக்கடி மேலெழுந்து, எறியும்
வாளையும் - (நீரை) வெட்டுகின்ற வாளைகளும், உடல்பரப்பிப்பறியும்
ஆமையும் - (அங்ஙனமே மேலெழுந்து) உறுப்புக்களை விரித்துத்தவழுகின்ற
ஆமைகளும் (அகழியிலே திரிதல்), சேண்தொடு - ஆகாயத்தை யளாவிய,
புரிசைப் பொறியும் அன்றி - மதிலின்கண் உள்ள பொறிகளே யன்றி, நாள்
மலர் செறியும் - அன்றலர்ந்த மலர்கள் நிறைந்த, அகழியும் - அகழதானும்,
வாள் ஒடு கேடகம் பற்றி - வாளோடு கேடகத்தையும் பற்றிக்கொண்டு,
உடன்று போர் புரிவது போலும் - கோபித்துப் (பகைவரோடு) போர்
புரிதலை ஒக்கும் எ - று.
வாளை
வாளினையும், ஆமை கேடகத்தையும் போலுமென்க. கேடகம்
- பரிசை. அகழியும் புரிசைப்பொறியும் போர்புரிவது போலும் எனினும் ஆம்.
இதற்கு அன்றி என்பது மாறுபட்டு என்னும் பொருளதாகும். அகழியும்
பொறியும் எனினும், அகழ பொறியுடன் மாறுபட்டு என்று கருத்துக்
கொள்ளவேண்டும். ஒன்றியென்பது பாடமாயின் எதிரெதிர் பொருந்தி
யென்க. ஏ : அசை. புரிவது தொழிற்பெயர். (15)
கண்ணி லாதவெங் கூற்றெனக் கராங்கிடந் தலைப்ப
மண்ணி னாரெவ ரேனுமிம் மடுவிடை வீழ்ந்தோர்
தெண்ணி லாமதி மிலைந்தவர்க் கொப்பெனச் சிலரை
எண்ணி னாரிரு ணரகநீத் தேறினு மேறார். |
(இ
- ள்.) கண் இலாத - கண்ணோட்டமில்லாத, வெம்கூற்று என -
வெவ்விய கூற்றுவனைப்போல, கராம் கிடந்து அலைப்ப - முதலை இருந்து
வருத்துதலைச் செய்ய, மண்ணினார் எவரேனும் - நிலவுலகிலுள்ளார்
யாவரேனும், இம்மடுவிடை வீழ்ந்தோர் - இவ்வகழியின் கண் வீழ்ந்தவர்கள்,
தெள்நிலா மதிமிலைந்தவர்க்கு - தெள்ளிய நிலவினையுடைய சந்திரனைச்
சடையிலணிந்த இறைவனுக்கு, ஒப்பு என - சமம் என்று, சிலரை
எண்ணினார் - சில தேவரைக் கருதினவர்கள், இருள் நரகம் நீத்து ஏறினும்
- இருளாகிய நரகத்தைக் கடந்தேறினாலும், ஏறார் - ஏறமாட்டார்கள்
எ - று.
கண்
- கண்ணோட்டம். கூற்றுவனுக்குக் கண்ணோட்டமின்மையை,
"தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ்
செல்வர்
ஈற்றிளம் பெண்டி ராற்றாப் பாலகர்
முதியோ ரென்னா னிளையோ ரென்னான்
கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்ப" |
(பா
- ம்.) * பொறியுமே யொன்றி. +புரிவன.
|