கலைபயின்று பரிநெடுந்தேர் கரிபயின்று பலகைவாள்
சிலைபயின்று வருகுமரர் திறநோக்கி மகிழவேந்தன்
அலைபயின்ற கடலாடை நிலமகளை யடலணிதோள்
மலைபயின்று குளிர்தூங்க மகிழ்வித்து வர்ழுநாள். |
(இ
- ள்.) கலைபயின்று - கற்றற்குரிய கலைகளைக் கற்று,
பரிநெடுந்தேர் கரிபயின்று - குதிரை நெடியதேர் யானை என்பவற்றைச்
செலுத்துந் திறமும் பயின்று, பலகை வாள் சிலை பயின்று - கேடகம் வாள்
வில் என்பவற்றின் வரிசையையும் கற்று, வருகுமரர் திறம் நோக்கி மகிழ்
வேந்தன் - வளர்கின்ற புதல்வர்களின் திறங்களைக் கண்டு மகிழும் அரசன்,
அலை பயின்ற கடல் ஆடை நிலமகளை - அலைகள் பொருந்திய கடலை
ஆடையாகவுடுத்த புவிமகளை, அடல் அணி தோள் மலை பயின்று குளிர்
தூங்க மகிழ்வித்து வாழும் நாள் - வெற்றியையே அணியாகப் பூண்ட
தோளாகிய மலையின்கண் தங்கி இன்புறுமாறு மகிழ்வித்து வாழுங்காலத்தில்.
கலை
கற்கும் நூல்கள். பரி முதலியன, அவற்றை ஊருந் தொழிற்கும்,
பலகை முதலியன அவற்றாற் பொருந்தொழிற்கும் ஆயின. திறம் - கூறுபாடு.
நிலமகளை மகிழ்வித்து எனக் கூட்டுக. மலையிலே தங்கிக் குளிர்ச்சியடைய
என்பதொரு நயமுங் காண்க. உயிர்களெல்லாம் இன்புற வருத்தமின்றாகப்
புரந்தான் என்பதனை இங்ஙனங் கூறினார். (5)
செய்யேந்து திருப்புத்தூர் நின்றுமொரு செழுமறையோன்
பையேந்து மரவல்குன் மனைவியொடும் பானல்வாய்க்
கையேந்து குழவியொடுங் கடம்புகுந்து மாதுலன்பால்
மையேந்து பொழின்மதுரை நகர்நோக்கி வருகின்றான். |
(இ
- ள்.) ஒரு செழு மறையோன் - ஓர் அழகிய வேதியன், செய்
ஏந்து திருப்புத்தூர் நின்றும் - வயல்கள் சூழ்ந்த திருப்புத்தூரினின்றும்,
அரவு எந்தும் பை அல்குல் மனைவியொடும் - பாம்பு ஏந்திய
படத்தினையொத்த அல்குலையுடைய மனைவியோடும், கை ஏந்து பால்
நல்வாய்க் குழவியொடும் - கடம் புகுந்து - காட்டின் வழியில் நுழைந்து, மாதுலன் பால்
- மாமன் வீட்டிற்கு, மை ஏந்து பொழில் மதுரை நகர்
நோக்கி வருகின்றான் - முகிலைச் சுமந்திருக்கும் சோலை சூழ்ந்த மதுரைப்
பதியை நோக்கி வருகின்றான்.
செய்
ஏந்து - கழனிகளை மிகுதியாகவுடைய, செழுமை குணத்தின்
மேற்று. அரவு ஏந்தும் பை என மாறுக. மாதுலனிடத்தை யடைதற்கு நகர்
நோக்கி வருகின்றான் என்க. மை - மேகம். (6)
வருவானுண் ணீர்வேட்டு வருவாளை வழிநிற்கும்
பெருவானந் தடவுமொரு பேராலி னீழலின்கீழ்
ஒருவாத பசுங்குழவி யுடனிருத்தி நீர்தேடித்
தருவான்போய் மீண்டுமனை யிருக்குமிடந் தலைப்படுமுன். |
|