II


110திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) வாயில் உளார்தம் மன்னவன் முன் போய் - வாயில்
காப்போர் தம் அரசன் முன் சென்று, மன்னா நம் கோயிலின் மாடு -
அரசே! நமது அரண்மனை வாயிலின் பக்கத்தில், ஓர் வேதியன்
அவிந்தாளைத் தாயினன் வந்து இங்கு இட்டு - ஒரு மறையோன் உயிரிழந்த
தன் மனைவியின் உடலை எடுத்து வந்து அங்குப் போட்டு, மாதைக் கொலை
செய்தான் ஆயினன் என்று ஓர் வேடனை முன் விட்டு - அவளைக் கொலை
செய்தானென்று ஒரு வேடனை முன்னே விட்டு, சமி அயர்கின்றான் என்றார்
- தனியே வருந்துகின்றான் என்றனர்.

     (செய்தான் என்பது செய்தானாயினன் என விரிந்து நின்றது. தாயினன்
- தாவினன்; அணைத்தனன்; முற்றெச்சம். வேதியன் வந்து இட்டு முன் விட்டு
அயர்கின்றான் என்றும், வாயிலுளார் வேதியன் அயர்கின்றான் என்றார்
என்றும் கூட்டுக. (19)

இறைமக னஞ்சா வென்குடை நன்றா லென்காவல்
அறமலி செங்கோ லஞ்சு பயந்தீர்த் தரசாளும்
முறைமையு நன்றான் மண்கலி மூழ்கா* முயன்றேந்தும்
பொறைமையு நன்றா லென்று புலந்து புறம்போந்தான்.

     (இ - ள்.) இறைமகன் அஞ்சா - (அதனைக் கேட்டலும்) அரசன்
அஞ்சி, என் குடை நன்று - (உயிர்களுக்குத் தண்ணிய நிழலைத் தரும்)
எனது வெண்கொற்றக் குடை நன்றாயிருந்தது; என் காவல் அறம் மலி
செங்கோல் - எனது காப்பாகிய அறம் மிக்க செங்கோலானது, அஞ்சு பயம்
தீர்த்து அரசு ஆளும் முறைமையும் நன்று - (குடிகளுக்கு) ஐவகை அச்சமும்
உண்டாகாமற் போக்கி ஆட்சி புரியும் முறையும் நன்றாயிருந்தது; மண்கலி
மூழ்கா முயன்று ஏந்தும் பொறைமையும் நன்று - நிலவுலகம் கலியில்
மூழ்காமல் தாளாண்மையுடன் தாங்கும் பொறையும் நன்றாயிருந்தது; என்று
புலந்து புறம் போந்தான் - என்று தன்னை வெறுத்துக் கொண்டு புறத்தே
வந்தான்.

     செங்கோலால் அரசாளும் முறைமையும் எனவும், என் காவலும்
செங்கோலும் முறைமையும் எனவும் விரித்துரைத்தலுமாம். அஞ்சு
என்பதனை இரட்டுற மொழிதலாக்கி, அஞ்சுகின்ற எனவும், ஐந்து எனவும்
பொருள் கொள்க. ஐந்து பயம் - அரசனாலும், அரசன் றமராலும்,
பகைவராலும், கள்வராலும், ஏனை உயிர்களாலும் உண்டாகும் அச்சம்;

"மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலை
தானதனுக் கிடையூறு தன்னாற்றன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தாற் கள்வரா லுயிர்தம்மால்
ஆனபய மைந்துந்தீர்த் தறங்காப்பா னல்லனோ"

என்று திருத்தொண்டர் புராணங் கூறுதல் காண்க. கலி - தீமை; துன்பம்.
மூழ்கா : ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். நன்று என்பன் இகழ்ச்சிக்
குறிப்பு : ஆல் அசை. (20)


     (பா - ம்.) * மூழ்க.