வேதிய னிற்குந் தன்மை தெரிந்தான் மெலிவுற்றான்
சாதியின் மிக்காய் வந்த துனக்கென் றளர்கின்றாய்
ஓதுதி யென்னக் காவல னைப்பார்த் துரைசான்ற
நீதியு ளாய்கே ளென்றுரை செய்வா னிகழ்செய்தி. |
(இ
- ள்.) வேதியன் நிற்கும் தன்மை தெரிந்தான் மெலிவுற்றான் -
மறையோன் (வந்து) நிற்கும் தன்மையைக் கண்டு மெலிந்து, சாதியின் மிக்காய்
- வருணத்தாற் சிறந்தவனே, தளர்கின்றாய் - நீ வருந்துகின்றனையே, உனக்கு
வந்தது என் - நினக்கு நேர்ந்த துன்பம் யாது, ஓதுதி என்ன - சொல்லக்
கடவாயென்று வினவ, காவலனைப் பார்த்து - அம்மறையோன் மன்னனை
நோக்கி, உரை சான்ற நீதியுளாய் கேள் என்று - புகழமைந்த நீதியுடையாய்
கேட்பாயாகவென்று, நிகழ் செய்தி உரை செய்வான் - நடந்த செய்தியைக்
கூறுவானாயினன்
. நிற்குந்
தன்மை - துன்பத்தில் ஆழ்ந்து நிற்கும் நிலைமை.
தெரிந்தான், மெலிவுற்றான் என்பன முற்றெச்சங்கள். மெலிதல் - உளம்
வாடுதல். ஓதுதி : ஒருமையேவல்; த் : எழுத்துப்பேறு. அரசன் தெரிந்து
மெலிந்து ஓதுதியென்ன மறையோன் உரை செய்வான் என்க. (21)
இன்றிவ ளைக்கொண் டோர்வட நீழ லிடையிட்டுச்*
சென்றுத ணீர்கொண் டியான்வரு முன்னிச் சிலைவேடன்
கொன்றய னின்றா னென்றுலை யூட்டுங் கொலைவேல்போல்
வன்றிறன் மாறன் செவிநுழை வித்தான் மறையோனால். |
(இ
- ள்.) இன்று இவளைக் கொண்டு ஓர் வட நீழல் இடையிட்டுச்
சென்று - இன்று இவளை அழைத்துக் கொண்டு வந்து ஓர் ஆலமரத்தின்
நிழலின்கண் இருத்தி (நீரின் பொருட்டுச்) சென்று, தண் நீர் கொண்டு யான்
வரு முன் - தண்ணீரினை முகந்து கொண்டு யான் வருதற்கு முன்னரே,
இச்சிலை வேடன் - இந்த வில் வேடனானவன், கொன்று அயல் நின்றான்
என்று - கொலை புரிந்து அருகே நின்று கொண்டிருந்தான் என்று
(இச்சொல்லை), உலை ஊட்டும் கொலை வேல் போல் - (கொல்லன்)
உலையிற்காய்ச்சிய கொலைத் தொழிலையுடைய வேல் போல, மறையோன்
- அவ்வேதியன், வல்திறல் மாறன் செவி நுழைவித்தான் - மிக்க
வலியினையுடைய பாண்டியனது செவியில் நுழைவித்தான்.
தணீர்,
ணகரம் தொக்கது. கொண்டியான், குற்றியலிகரம். வன்றிறல்,
ஒரு பொருளிருசொல். வேல் நுழைந்தாற் போல் நுழையச் செய்தான் என்க;
இச் சொல் செவியுறும் பொழுதே அரசன் அளவற்ற வேதனையெய்தினான்
என்றபடி. முற்றுவினை முன் வந்தது. ஆல் : அசை. (22)
(பா
- ம்.) * இடைவிட்டு.
|