அந்தணன் மாற்றந் தன்னையு முட்கொண்ட டறநோக்குஞ்
சந்தன வெற்பன் மறவனை நோக்கத் தாழ்ந்தன்னான்
எந்தை பிரானே நாயடி யேனின் றெய்ப்பாற
வந்து புகுந்தே னந்த மரத்தின் மருங்கோர்சார். |
(இ
- ள்.) அறம் நோக்கும் சந்தன வெற்பன் - அறத்திற் பிழை யாமையையே
குறிக் கொள்ளும் பொதியின் மலையையுடைய பாண்டியன்,
அந்தணன் மாற்றம் தன்னையும் உட்கொண்டு - மறையோன் சொல்லையும் கேட்டு மனத்திற்
கொண்டு, மறவனை நோக்க - வேடனைப் பார்க்க,
அன்னான் தாழ்ந்து - அவ்வேடன் வணங்கி, எந்தை பிரானே - எம் தந்தையாகிய பெருமானே,
நாய் அடியேன் - அடி நாயேனாகிய யான்,
இன்று எய்ப்பு ஆற - இன்று இளைப்பாறுதற் பொருட்டு, அந்த மரத்தின்
மருங்கு ஓர் சார் வந்து புகுந்தேன் - அவ்வால மரத்தின் அடியில் ஒரு
பக்கத்தில் வந்தடைந்தேன்.
மாற்றத்
தன்னையும், தன் : சாரியை; வேடன் மாற்றத்தையும் கேட்க
என்னும் பொருள் குறித்தலால் உம்மை எச்சப் பொருட்டு. உட்கொள்ளல் -
கேட்டலும், மனத்திற் கொள்ளலும். நோக்கும் என்னும் பெயரெச்சம் வெற்பன்
என்பதன் விகுதியைக் கொள்ளும். சந்தன வெற்பு - சந்தன மரங்களையுடைய
மலை; பொதியில். நோக்க - நிகழ்ந்ததைச் சொல்லுமாறு நோக்கினாற்
கட்டளையிட. அறத்தை நோக்குவோனாகலின் அந்தணன் சொல்லைக் கேட்ட வளவில் வேடனை
ஒறுத்தல் செய்யாது, அவன் வாய் மொழியையும்
கேட்டறிய விரும்பினான் என்க. எத்துணையும் சிறுமையுடைய ஏவலாளன்
என்பான் 'நாயடியேன்' என்றான். (23)
ஐயே நானுங் கொன்றவ னல்லேன் கொன்றாரைக்
கையேன் வேறுங் கண்டில னென்றா னிவளாகம்
எய்யே றுண்ட வாறெவ னென்றா ரெதிர்நின்றார்
மெய்யே யையா யானறி யேனிவ் விளைவென்றான்.
|
(இ
- ள்.) ஐயே - ஐயனே, நானும் கொன்றவன் அல்லேன் - நானும்
இவளைக் கொலை செய்தவ னல்லேன்; கையேன் - கீழ் மகனாகிய யான்,
வேறு கொன்றாரையும் கண்டிலன் என்றான் - வேறு கொன்ற வரையுங்
காணேன் என்று கூறினான்; எதிர் நின்றார் - எதிர் நின்ற அமைச்சர், இவள்
ஆகத்து எய் ஏறுண்டவாறு எவன் என்றார் - (ஆயின்) இவள் உடலிலே
அம்ப தைத்துருவியது எங்ஙனம் என்றார், ஐயா இவ்விளைவு மெய்யே யான் அறியேன் என்றான்
- ஐயா! இந்நிகழ்ச்சியை உண்மையாகவே யான்
அறியேன் என்றான்.
ஐயனே
யெனற்பாலது வேட்டுவர் பேசு முறைக்கியைய 'ஐயே' என
நின்றது; ஐ என்பது விளியுரு பேற்றதுமாம்; ஐ - தலைவன்; அரசன். கை -
சிறுமை. வேறு கொன்றாரையும் என உம்மையை மாறுக. அன்னான் எய்ப்பாற
வந்து புகுந்தேன் கொன்றவ னல்லேன் கண்டிலன் என்றான்; என மேற்
செய்யுளோடு இயைத்துரைக்க. எய் - எய்யப்படுவது; அம்பு.
|