II


122திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



என்று கூறி, இன் அருள் சுரந்து - இனிய கருணை சுரந்து, வேண்டுவன நனி
நல்கி - அவன் விரும்பிய பொருள்களை மிகவும் அளித்து, அவன் இடைச்
செலுத்தி - அவனிடத்திற்குப் போக விடுத்து, களியானை விழ எய்த
கௌரியனைப் போய்ப் பணிவான் - (சமணர்கள் ஏவிய) களிப்பினையுடைய
யானை விழும்படி அம்பெய்த சோமசுந்தரக் கடவுளைச் சென்று
வணங்குவானாயினான்.

     அவனை விளியா எனக் கூட்டுக; விளியா - விளித்து :
பெயரெச்சமாக்கி, கெடாத இனிய அருள் என்றுரைத்தலுமாம். வேண்டுவன -
வரிசைகளுமாம். கௌரியன் - பாண்டியன்; இறைவன் சுந்தர பாண்டியனாக
விருந்து அரசு புரிந்தனனாகலின் 'கௌரியன்' என்றார். (43)

[எழுசீரடியாசிரிய விருத்தம்]
ஆதரம் பெருகப் பாவியேள் பொருட்டெம்
     மடிகணீ ரரும்பழி யஞ்சு
நாதரா யிருந்தீ ரெந்தையார்க் குண்டோ*
     நான்செயத் தக்கதொன் றென்னாக்
காதலிற் புகழ்ந்து பன்முறை பழிச்சிக்
     கரையின்மா பூசனை சிறப்பித்
தேதம தகற்றி யுலகினுக் குயிரா
     யிருந்தன னிறைகுலோத் துங்கன்.

     (இ - ள்.) ஆதரம் பெருக - அன்பு மேலோங்கத் (திருமுன் நின்று)
எம் அடிகள் - எம்மிறைவரே, பாவியேன் பொருட்டு நீர் அரும்பழி அஞ்சும்
நாதராய் இருந்தீர் - பாவியேன் பொருட்டாகத் தேவரீர் அரிய பழியினை
அஞ்சுகின்ற நாதராயிருந்தீர்; எந்தையார்க்கு நான் செயத்தக்கது ஒன்று
உண்டோ என்னா - (அங்ஙன மிருந்த) எம் தந்தையாகிய உமக்கு நான்
செய்யத் தக்க கைம்மாறு ஒன்று உண்டோ என்று, காதலில் புகழ்ந்து -
அன்பினாற் புகழ்ந்து, பல் முறை பழிச்சி - பல முறை துதித்து, கரை இல்
மா பூசனை சிறப்பித்து - அளவில்லாத பெரிய பூசைகளைச் செய்வித்து,
இறை குலோத்துங்கன் - அரசனாகிய குலோத்துங்க பாண்டியன், ஏதம்
அகற்றி - துன்பமுண்டாகாமற் போக்கி, உலகினுக்கு உயிராய் இருந்தனன் -
உலகத்திற்கு ஓர் உயிராகி வீற்றிருந்தான்.

     ஆதரம் பெருகத் திருமுன் நின்று கூறிப் புகழ்ந்து என்க.
பாவியேனுக்கு வரக்கிடந்த பழிக்கு அஞ்சினமையால், பழியஞ்சு நாதர்
என்பதொரு பெயருடையராயினீர் என்பான் 'பழியஞ்சுநாதராயிருந்தீர்'
என்றான். எளியேனாற் செய்யத்தக்கதொரு கைம்மாறும் உண்டோவென்க.
மா பூசனை - விழா முதலியன. ஏதம் - உலகிற்கு ஐவகையால் வருந்
துன்பம். அது : பகுதிப் பொருள் விகுதி. "மன்ன னுயிர்த்தே மலர்தலை
யுலகம்" என்பவாகலின் 'உலகினுக் குயிரா யிருந்தனன்' என்றார். (44)

                        ஆகச் செய்யுள்-1533


     (பா - ம்.) *உண்டே.