II


124திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) வெருவும் காய் சினம் மாறிய வேதியன் - யாவரும்
அஞ்சத்தக்க சுடுகின்ற சினம் நீங்கிய அம் மறையோனுக்கு, காதல் மருவும்
மனை எனும் பேரினாள் - விருப்பம் பொருந்திய மனைவி என்ற பெயரினை
யுடையவள், திருவும் காமன் நல் தேவியும் - திருமகளும் மதவேளின் நல்ல
மனவைியாகிய இரதியும், மண்புனை உருவும் - சுதையாற் செய்த பாவையும்,
காமுறும் - விரும்பத்தக்க, ஒப்பு இல் வனப்பினாள் - ஒப்பற்ற
அழகினையுடையாள்.

     சினம் மாறிய - வெகுளி தன்கண் உண்டாகப் பெறாத. வேதியன்
மனையெனக் கூட்டுக. மனை - மனையாள். மனைக்குரிய மாண்பு
சிறிதுமிலளென்பார், 'மனையெனும் பேரினாள்' என்றார். திருவும் தேவியும்
உருவும என்னும் உம்மைகள் எண்ணுப் பொருளோடு சிறப்புங் குறித்தன.
மண் - சுதை;

"மண்மாண் புனைபாவை"

என்பது திருக்குறள். (3)

படியி லோவியப் பாவையொப் பாகிய
வடிவி னாளவள் பான்மக னென்றொரு
கொடிய பாவி பிறந்து கொலைமுதற்
கடிய பாவக் கலன்போல்* வளருநாள்.

     (இ - ள்.) படி இல் ஓவியப் பாவை ஒப்பு ஆகிய வடிவினாள் அவள்
பால் - ஒப்பில்லாத சித்திரப் பாவையை நிகர்த்த அழகினையுடைய
அவளிடத்து, மகன் என்று ஒரு கொடிய பாவி பிறந்து - மகன் என்று ஒரு
கொடும்பாவி தோன்றி, கொலை முதல் கடிய பாவக் கலன் போல் வளரு
நாள் - கொலை முதலிய கொடிய பாவங்களாகிய சரக்குகளை ஏற்றிய கப்பல்
போல வளரு நாளில்.

     படி - ஒப்பு. படியில் என்பதற்குப் புவியில் என்றுரைத்தலுமாம்.
வடிவினாளாகிய அவளென்க. நன்மக்கட்குரிய பண்பு சிறிதுமில்லானென்பார்
'மகனென்று' என்றார். வளரலுற்றான் அங்ஙனம் வளரும் நாளில் என
விரிக்க. (4)

கோடி கோடி யடுஞ்சில கோட்டியே
கோடி கோடி கொடுங்கணை பூட்டியே
கோடி கோடி விகாரமுங் கூட்டியே
கோடி கோடி யனங்கரெய் தார்கொலோ.

     (இ - ள்.) கோடி கோடி அனங்கர் - அநேகங்கோடி காமர்கள், கோடி கோடி அடுஞ்சிலை கோட்டியே - பலகோடி கொல்லதற் றொழிலையுடைய
விற்களை வளைத்து, கோடி கோடி கொடுங்கணை பூட்டியே - பல கோடி
கொடி அம்புகளைப் பூட்டி, கோடி கோடி விகாரமும் கூட்டி - பல கோடி விகாரங்களைக் கூட்டி, எய்தார் கொலோ - எய்தார்களோ (யாம் அறியேம்).


     (பா - ம்.) * கனல்போல்.