II


128திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) மண் தொடும் கருவிப் படை வன் கையில் கொண்டு
- மண் வெட்டுங் கருவியாகிய படையினைத் தனது வலிய கையிலேந்தி,
தாதை குரவன் என்று ஓர்கிலான் - தன் தந்தையை ஐங்குரவருள்
ஒருவனென்று அறியாதவனாய், ஆய் முகத்து உண்ட காம நறவால்
உணர்வு இலான் - தாயினிடத்துப் புணர்ந்து நுகர்ந்த காமமாகிய கள்ளினால்
அறிவிழந்த பாவி, துண்டமாகத் துணித்தனன் - (அவனைத்) துண்டு பட
வெட்டினான்.

     மண்டொடுங் கருவி - மண் வெட்டி. கருவிப்படை : இருபெயரொட்டு.
வன்கை - கொலை செய்யுங் கை. ஐங்குரவரிவரென்பதனையும், அவரை
வழிபட வேண்டுமென்பதனையும்,

"அரச னுவாத்தியான் றாய்தந்தை தம்முன்
நிகரில் குரவ ரிவரிவரைத்...............
தேவரைப் போலத் தொழுதெழுக வென்பதே
யாவருங் கண்ட நெறி"

என்னும் ஆசாரக்கோவையாலுணர்க. 'தாய்முகம்' - முகம் : ஏழன்
உருபு. (12)

பமைக்க ருங்கங்குல் வாய்க்கொன்ற தாதைக்குத்
தக்க தீத்தவி சிட்டன்னை தன்னொடுங்
கைக்க டங்கு பொருளொடுங் கன்னெறி
புக்க னன்புடை சூழ்ந்தார் புளிநரே.

     (இ - ள்.) மைக்கருங் கங்குல்வாய் - மைபோலும் கருமையாகிய
இரவின்கண், கொன்ற தாதைக்கு - தன்னாற் கொல்லப்பட்ட தந்தைக்கு,
தக்க தீத்தவிசு இட்டு - பொருந்திய தீயாகிய படுக்கையமைத்து, அன்னை
தன்னொடும் கைக்கு அடங்கு பொருளொடும் கல்நெறி புக்கனன் -
தாயோடும் சுமக்கத் தகுந்த பொருளோடும் கற்கள் பொருந்திய சுர
நெறியை அடைந்தனன்; புளிநர் புடை சூழ்ந்தார் - ஆறலைக்கும்
வேடர்கள் அவனைச் சுற்றிலும் வளைந்து கொண்டனர்.

     இருள் மைபோலுமென்பது,

"எண்ணு மிவ்வுல கத்தவர் யாவரும்
துண்ணெ னும்படி தோன்றிமுன் றோய்ந்திடில்
வண்ண நீடிய மைக்குழம் பாமென்று
நண்ணல் செய்யா நடுவிருள் யாமத்து"

     என்னும் பெரியபுராணச் செய்யுளிற் புனைந்துரைக்கப் பட்டிருத்தல்
காண்க. கொன்ற : செயப்பாட்டுவினை. தீத்தவிசு - ஈமத் தீயாகிய படுக்கை;
ஈமப் பள்ளியிற் கிடத்தியெரித்தென்க. கைக்கடங்கு பொருள் - கையில்
எடுக்கலான பொருள். (13)