II


146திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



அறங்கடை நின்றா ருள்ளு மாற்றவுங் கடைய னாகிப்
புறங்கடை நின்றான் செய்த புலைமைதன் பதிக்குந் தேற்றாள்
மறந்தவிர் கற்பி னாடன் மனம்பொதிந் துயிர்க டோறும்
நிறைந்தநான் மாடக் கூட னிமலனை நினைந்து நொந்தாள்.

     (இ - ள்.) அறங்கடை நின்றாருள்ளும் ஆற்றவும் கடையனாகி -
பாவநெறியில் நின்றாரெல்லாருள்ளும் மிகவுங் கடையனாகி, புறங்கடை
நின்றான் செய்த புலைமை - மனையின் வாயிற் புறத்தே வந்து நின்ற அக்
கொடியோன் செய்த புலைத் தன்மையை, தன் பதிக்கும் தேற்றாள் - தன்
நாயகனுக்குந் தெரிவியாது, மறம் தவிர் கற்பினாள் - மறம் நீங்கிய
கற்பினையுடையாள், மனம் பொதிந்து - தன் மனத்தின் கண்ணே மூடி
வைத்து, உயிர்கள் தோறும் நிறைந்த நான்மாடக் கூடல் நிமலனை நினைந்து
நொந்தாள் - உயிர்கள் தோறும் நிறைந்துள்ள கூடலம்பதியில்
எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுளை நினைந்து வருந்தினாள்.

     அறங்கடை - பாவம்;

"அறங்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்"

என்னும் வாயுறைவாழ்த்து இங்கு நோக்கற்பாலது. புலைமை - கீழ்மை.
மறந்தவிர் கற்பினாள் - அறக்கற்புடையாள். அறக் கற்பினளாகலின் பதிக்கும்
தெரிவியாது கூடனிமலனை நினைந்து நொந்தாள் என்க. (9)

தாதக நிறைந்த கொன்றைச் சடையவன் புறம்பு செய்த
பாதக மறுக்குங் கூடற் பகவனெவ் வுயிர்க்குந் தானே
போதக னாகித் தோற்றும் புண்ணியன் புலைஞன் செய்த
தீதக முணர்ந்து தண்டஞ் செய்வதற் குள்ளங் கொண்டான்.

     (இ - ள்.) அகம் தாது நிறைந்த கொன்றைச் சடையவன் - உள்ளே
மகரந்த நிறைந்தத கொன்றை மலர் மாலையையணிந்த சடையையுடையவனும்,
புறம்பு செய்த பாதகம் அறுக்கும் கூடல் பகவன் - வேற்று நாட்டிற் செய்த
மாபாதகத்தையும் போக்கும் மதுரைப் பிரானும், எவ்வுயிர்க்கும் தானே
போதகன் ஆகித் தேற்றும் புண்ணியன் - எவ்வகை உயிர்களுக்குந் தானே
உணர்த்துவோனாகி அறிவிக்கும் அறவடிவினனும் ஆகிய சோமசுந்தரக்
கடவுள், புலைஞன் செய்த தீது அகம் உணர்ந்து தண்டம் செய்வதற்கு
உள்ளம்கொண்டான் - நீசனாகிய சித்தன் செய்த தீங்கினை மனத்தினுணர்ந்து
அவனைத் தண்டிப்பதற்குத் திருவுள்ளங் கொண்டருளினான்.

     புறம்பு செய்த பாதக மறுக்கும் என்றதன் கருத்து பிற பதிகளிற்
போக்கலாகாத பாவத்தையும் போக்குமென்பதாம். பகவன் - இறைமைக்
குணங்கள் ஆறுடையான், போதகனாகி - அறிவினை விளக்குவோனாகி;
பக்குவ மெய்திய உயிர்களுக்கெல்லாம் ஆசானாகி மெய்ப்பொருளைத்
தெளிவிக்கும் என்றுமாம். (10)