II


152திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



விரைசெய்தா ரவன்யா னங்கம் வெட்டினே னல்லே னீங்கள்
உரைசெய்வ தெவன்யா ரென்போற் சித்தனை யுடன்று மாய்த்து
வரைசெய்தோள் விந்தைக் கீந்தார் மற்றிது சுற்றும் வையைத்
திரைசெய்நீர்க் கூட லெந்தை திருவுளச் செயல்கொ லென்றான்.

     (இ - ள்.) விரை செய் தாரவன் - (அதனைக் கேட்டு) மணம் வீசும்
மாலையையணிந்த குரவன், யான் அங்கம் வெட்டினேன் அல்லேன் - யான்
சித்தனுடைய உடலை வெட்டினேனல்லேன்; நீங்கள் உரை செய்வது எவன்
- நீங்கள் இங்ஙனம் கூறுவது என்னை, என்போல் உடன்று சித்தனை மாய்த்து
- என் போல் வந்து போர் புரிந்து சித்தனைக் கொன்று, வரை செய்தோள்
விந்தைக்கு ஈந்தார் யார் - மலை போலும் தம் தோள்களைக் கொற்றவைக்கு
அளித்தார் யாவரோ, இது - இந்நிகழ்ச்சி, சுற்றும் திரை செய் நீர் வையை
கூடல் எந்தை திருவுளச் செயல் கொல் என்றான் - சூழ்ந்திரா நின்ற
அலைகளை வீசும் நீரினையுடைய வையை யாற்றினையுடைய நான்மாடக்
கூடலில் எழுந்தருளிய எம் தந்தையாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவுளச்
செயலோ என்று கூறினான்.

     வெட்டிலேன் என்பது வெட்டினேனல்லேன் என விரிந்து நின்றது :
வரை செய், செய் : உவமவுருபு. தோள்களை விந்தை குடியிருக்க அளித்தவர்.
அவன் தோளைத் தறித்துத் துர்க்கைக்குக் கொடுத்தவர் என்று பிறர் கூறுவர்;
அது சிறவாமை காண்க. சுற்றும் வையை - மதுரையைச் சூழ்ந்திருக்கும்
வையை. கொல் : ஐயப் பொருட்டு. (22)

மட்டித்த கலவைக் கொங்கை மனைவியுஞ் சித்தன் றன்னைக்
கிட்டிப்பல் காலும் வந்து கேட்டது நெருநல் வாய்வந்
தொட்டித்தன் கையைப் பற்றி யீர்த்தது முள்ளம் வெந்து
தட்டிப்போய்க் கதவந் தாழிட் டிருந்ததுஞ் சாற்றி னாளே.

     (இ - ள்.) கலவை மட்டித்த கொங்கை மனைவியும் - கலவை பூசிய
கொங்கையையுடைய குரவன் பன்னியும், சித்தன் தன்னைக் கிட்டி பல்காலும்
வந்து கேட்டதும் - சித்தனானவன் தன்னை நெருங்கி வந்து பல முறையும்
(இடனுண்டா என்று) கேட்டதும், நெருநல் வாய் ஒட்டி வந்து தன் கையைப்
பற்றி ஈர்த்ததும் - நேற்றைப் பொழுது நெருங்கி வந்து தனது கையைப்
பிடித்து இழுத்ததும், உள்ளம் வெந்து தட்டிப் போய்க் கதவம் தாழிட்டு
இருந்ததும் - மனம் நொந்து அவனை விலக்கிப் போய்க் கதவைத்
தாழிட்டுக் கொண்டு இருந்ததும், சாற்றினாள் - கூறினாள்.

     தட்டி - அகப்படாது தள்ளி. கதவம், அம் : பகுதிப் பொருள் விகுதி.
(23)

அம்மனை யருளிச் சொன்ன படியெலா மருளிச் செய்து
தெம்முனை யடுவாள் வீரர் சித்தனை மாய்த்தா ரீது
மெய்ம்மையா மென்று கண்ட மைந்தரும் விளம்பக் கேட்டான்
எம்மையா ளுடைய கூட லிறைவிளை யாட்டே யென்றான்.