II


அங்கம் வெட்டின படலம்153



     (இ - ள்.) அம்மனை அருளிச் சொன்னபடி எலாம் - எம்
அன்னையாகிய இவர் கூறியருளினபடியெல்லாம், தெவ் முனை அடுவாள்
வீரர் அருளிச் செய்து சித்தனை மாய்த்தார் - பகைவர் முனையை மாய்க்கும்
வாள் வீரர் கூறியருளிச் சித்தனை வதைத்தனர்; ஈது மெய்மை ஆம் என்று
கண்ட மைந்தரும் விளம்பக் கேட்டான் - இஃது உண்மையாம் என்று பார்த்த
மாணவர்களுஞ் சொல்லக் கேட்டான் (ஆசிரியன்); எம்மை ஆள் உடைய
கூடல் இறை விளையாட்டே என்றான் - (இஃது) எம்மை ஆளுதலையுடைய
கூடல் நாயகனாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடலே என்றான்.

     குரவனாவான் தந்தையாகலின் குரவன் பன்னியைத் தாய் என்றும்,
மாணாக்கரை மைந்தர் என்றும் கூறினார். அருளிச் சொன்ன என்பதைச்
சொல்லியருளின என்று விகுதி பிரித்துக் கூட்டுக. தெம் முனை - போர்
முனையில் என்றுமாம். முன் எந்தை திருவுளச் செயல் கொல் என்று
ஐயுற்றவன் இப்பொழுது துணிந்தான் என்பார் விளையாட்டே எனத்
தேற்றேகாரங் கொடுத்தார். (24)

கொடியைநே ரிடையா ளோடுங் கொற்றவா ளிளைஞ ரோடுங்
கடியநான் மாடக் கூடற் கண்ணுத லாடிக்கீழ்த் தாழ்ந்து
நெடியனான் முகனுந் தேறா நெறியது சிறிய வேழை
அடியனே னளவிற் றேநின் னருள்விளை யாட லென்றான்.

     (இ - ள்.) கொடியை நேர் இடையாளோடும் - கொடியை ஒத்த
இடையினையுடைய தன் மனைவியோடும், கொற்றவாள் இளைஞரோடும் -
வெற்றி பொருந்திய வாள் விஞ்சை பயிலும் மாணவர்களோடும் (சென்று),
கடிய நான்மாடக் கூடல் கண்ணுதல் அடிக்கீழ்த் தாழ்ந்து - காவலையுடைய
நான்மாடக் கூடலில் எழுந்தருளியுள்ள நெற்றிக் கண்ணையுடைய இறைவனது
திருவடியின் கீழ் வணங்கி, நெடியன் நான்முகனும் தேறா நெறியது நின்
அருள் விளையாடல் - திருமாலும் பிரமனும் தெளியாத நெறியதாகிய உனது
அருள் விளையாட்டு, சிறிய ஏழை அடியனேன் அளவிற்றே என்றான் -
ஒன்றுக்கும் பற்றாத அறிவிலியாகிய அடியேன் அளவினதோ என்று
துதித்தான்.

     சென்று என ஒரு சொல் வருவிக்க. கடிய - காவலையுடைய : குறிப்புப்
பெயரெச்சம். நெடியனும் என உம்மை விரிக்க. யாவர்க்கு மேலாம் இறைவன்
எத்துணையும் சிறிய தமக்கு எளிவந்த பேரருளை நினைந்து 'அடியனே
னளவிற்றே' என ஆராமை மேலிட்டுக் கூறியவாறு; 'ஏழையேங்களுக் காவதோ எந்தை நின் கருணை' என முன் கூறினமையுங் காண்க. (25)

தண்மதி வழிவந் தோனு நகருளார் தாமும் பாதி
விண்மதி மிலைந்த வேணி விடையவ னாட னோக்கிக்
கண்மலர் வெள்ளத் தாழ்ந்து கனைகழ லடியிற் றாழ்ந்து
பண்மலர் கீதம் பாடி யாடினார் பழிச்சி நின்றார்.