II


156திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



இருபத்தெட்டாவது நாகமெய்த படலம்

[எழுசீரடியாசிரிய விருத்தம்]
செங்கண் மால்விடை மேல்வி டங்கர் செருக்க ளத்திடை                                          வாளெடுத்
தங்கம் வெட்டிய சேவ கத்தை யறைந்த னந்தமிழ் மாறன்மேற்
சங்கை யிட்டம ணீச ராற்றிய தறுகண் வேள்வி முளைத்ததோர்
வெங்கண் வாளர வைத்து ணித்து விளித்த வாறு விளம்புவாம்.

     (இ - ள்.) செங்கண் மால் விடைமேல் விடங்கர் - சிவந்த
கண்களையுடைய திருமாலாகிய இடபவூர்தியின்மேல் இவர்ந்தருளும்
பேரழகராகிய சோமசுந்தரக் கடவுள், செருக்களத்து இடைவாள் எடுத்து -
போர்க் களத்தின்கண் வாட்படையைத் தாங்கி, அங்கம் வெட்டிய
சேவகத்தை அறைந்தனம் - அங்கம் வெட்டிய திருவிளையாடலைக்
கூறினோம்; தமிழ் மாறன்மேல் சங்கை இட்டு - (இனி) தமிழ் வேந்தனாகிய
பாண்டியன் மேல் பகை கொண்டு, அமண் நீசர் ஆற்றிய - சமணராகிய
கீழோர் செய்த, தறுகண் வேள்வி முளைத்தது ஓர் வெங்கண் வாள் அரவை -
கொடிய வேள்வியின்கண் தோன்றியதாகிய ஒரு வெவ்விய கண்களையுடைய
கொடிய பாம்பினை, துணித்து விளித்தவாறு விளம்புவாம் - துண்டு செய்து
கொன்றருளிய திருவிளையாடலைக் கூறுவோம்.

     சேவகம் - வீரம்; திருவிளையாடலை யுணர்த்திற்கு. சங்கை -
பகையென்னும் பொருட்டு. வாளரவு - கொடிய பாம்பு. விளித்த, விளிந்த
வென்பதன் பிறவினை. விளித்தவாறும் என உம்மை விரித்துரைத்தலுமாம். (1)

கோதி லாத குணத்த னந்த குணப்பெ ருந்தகை மீனவன்
ஆதி நாயக னுருவ மாகிய வைந்தெ ழுத்தொடு கண்டிவெண்
பூதி சாதன மாவ தேபொரு ளென்று பத்திமை பூண்டுதன்
தாதை யேமுத லாய மன்னவர் தம்மி னுந்தலை யாயினான்.

     (இ - ள்.) கோது இலாத குணத்து - குற்றமில்லாத குணத்தினையுடைய,
அனந்தகுணப் பெருந்தகை மீனவன் - அனந்தகுணன் என்னும்
பெயரினையுடைய பெருந்தகுதியையுடைய பாண்டியன், ஆதிநாயகன் உருவம்
ஆகிய ஐந்து எழுத்தொடு - முழுமுதற்றலைவனாகிய சோம சுந்தரக்
கடவுளின் திருவுருவாகிய திருவைந்தெழுத்துடன், கண்டி வெண்பூதி சாதனமே
- உருத்திராக்கமும் வெள்ளிய திருநீறுமாகிய சாதனமே, பொருள் ஆவது
என்று பத்திமை பூண்டு - மெய்ப்பொருளாவது என்று அன்பு கொண்டதால்,
தன் தாதையே முதல் ஆய மன்னவர் தம்மினும் - தன் தந்தை முதலாகிய
அரசர்களினும், தலை ஆயினான் - சிறந்தவனானான்.