II


188திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



என்பது பெரியபுராணம். தமிழ் நாட்டு மூவேந்தரல்லாத குறுநில
மன்னர்களை வேடர், காடவர் முதலிய பெயர்களால் ஒரு காலத்தில்
இழித்துரைத்து வந்தனர் எனத் தெரிகிறது. பரிமான்; இருபெயரொட்டு;
விரைந்த செலவினையுடைய குதிரையுமாம். படையெடுத்தல் - சேனையுடன்
மேற்சேறல். உற - மிக. அறிந்தான் என்பதனை எச்சமாக்கலுமாம். (4)

தன்னதுதா ணிழனின்ற சாமந்தன் றனைப்பார்த்தெம்
பொன்னறைதாழ் திறந்துநிதி முகந்தளித்துப் புதிதாக
இன்னமுநீ சிலசேனை யெடுத்தெழுதிக் கொள்கென்றான்
அன்னதுகேட் டீசனடிக் கன்புளா னென்செய்வான்.

     (இ - ள்.) தன்னது தாள் நிழல் நின்ற சாமந்தன் தனைப் பார்த்து -
தனது அடி நிழலில் நின்ற சாமந்தனை நோக்கி, எம் பொன்அறை தாழ்
திறந்து நிதிமுகந்து அளித்து - எமது நிதி அறையின் தாழைத் திறந்து
பொருளை முகந்து கொடுத்து, புதிது ஆக இன்னமும் நீ சில சேனை
எடுத்து எழுதிக் கொள்க என்றான் - புதிதாக இன்னுஞ் சில சேனைகளைச்
சேர்த்துப் பதிவு செய்து கொள்வாயாக என்றான்; அன்னது கேட்டு ஈசன்
அடிக்கு அன்பு உளான் என் செய்வான் - அதனைக் கேட்டு இறைவன்
திருவடிக்கு அன்புள்ளவனாகிய சுந்தரசாமந்தன் என்ன செய்கின்றானென்னில்.

     தன்னது, னகரம் விரித்தல். அடங்கி நின்றமையைத் தாணிழல் நின்ற
என்றார். தன் : சாரியை, புதிது - புதுமை; பண்பு மாத்திரையாக நின்றது.
எடுத்து - தேர்ந்து திரட்டி, எழுதுதல் - உரிமையைப் பதிவு செய்தல். கொள்
கென்றான் : அகரந் தொக்கது. (5)

தென்னவர்கோன் பணித்தபணி பின்றள்ளச் சிந்தையிலன்
புன்னவர னருளவந்து முன்னீர்ப்ப வொல்லைபோய்ப்
பொன்னறைதாழ் திறந்தறத்தா றீட்டியிடும் பொற்குவையுட்
டன்னதுளத் தவாவமையத் தக்கநிதி கைக்கவரா.

     (இ - ள்.) தென்னவர்கோன் பணித்த பணி பின் தள்ள - பாண்டியர்
தலைவனாகிய குலபூடணன் இட்ட பணி பின்னே நின்று தள்ளவும்,
சிந்தையில் அன்பு உன்ன அரன் அருள் வந்து முன் ஈர்ப்ப - மனத்தில்
அன்புடன் நினைத்த வளவிலே சிவபெருமான் திருவருள் வந்து முன்னே
இழுக்கவும், ஒல்லைபோய் - விரைந்து சென்று, பொன் அறை தாழ் திறந்து
- கருவூலத்தின் தாழைத் திறந்து, அறத்து ஆறு ஈட்டியிடும் பொன்
குவையுள் - அறநெறியால் ஈட்டி வைத்த நிதிக் குவியலுள், தன்னது உளத்து
அவா அமையத்தக்க - தன்னது உள்ளத்து விருப்பம் அடங்கத்தக்க,
நிதிகைக் கவரா - பொருளைக் கைக்கொண்டு.

     பணி பின்றள்ளவும் அருள் முன்னீர்ப்பவும் ஒல்லைபோய் என்க.
அவாவிற்குப் பொருந்த மிகுதியான நிதியைக் கவர்ந்து என்றுமாம். (6)