II


190திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



அண்டமுக டுரிஞ்சிநிமிர் கோபுரமு மாயிரக்கான்
மண்டபமுங் கண்டிகையும் வயிரமணிக் கோளகையுங்
குண்டலமுந் தண்டரளக் குடைநிரையுங் கொடிநிரையுங்
கண்டனன்முன் னவனருளாற் பிறப்பேழுங் கரைகண்டோன்.

     (இ - ள்.) அண்ட முகடு உரிஞ்சி நிமிர் கோபுரமும் - வானத்தின்
உச்சியைத் தடவி உயர்ந்த கோபுரமும், ஆயிரக்கால் மண்டபமும் - ஆயிரம்
தூண்களையுடைய மண்டபமும், கண்டிகையும் வயிர மணிக்கோளகையும் -
கண்டிகையும் வயிரமணியாற் செய்த தோளணியும், குண்டலமும் -
குண்டலங்களும், தண் தரளக்குடை நிரையும் - தண்ணிய முத்துக்குடை
வரிசைகளும், கொடி நிரையும் - கொடிவரிசைகளும் ஆகிய இவற்றை,
முன்னவன் அருளால் ஏழு பிறப்பும் கரை கண்டோன் கண்டனன் -
முதல்வனாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவருளால் எழுவகைப்
பிறப்பென்னுங் கடலின் கரையைக் கண்டவனாகிய சாமந்தன்
செய்தமைத்தான்.

     கோளகை - யானைக் கொம்பின் முனையிற் செறிக்கும் குமிழ்; ஈண்டுத்
தோள்வலயத்தைக் குறிக்கின்றது போலும்; முன்னவனருளாற் கண்டனன் என்று
கூட்டியுரைத்தலும் பொருந்தும். கண்டனன் அதனாற் கரைகண்டோனாயினன்
என்னுங் கருத்துங் கொள்க. (9)

வானாடர்க் கவியுணவின் வகைமுந்நூன் மன்றல்முதல்
நானாவாஞ் சிறுவேள்வி நான்மறையோர்க் கறுசுவையின்
ஆனாத பேருண்டி துறவடைந்தோர்க் கருத்துபலி
தானாதி பலவேறு தருமநனி தழைவித்தான்.

     (இ - ள்.) வானாடர்க்கு அவி உணவின் வகை - தேவர்களுக்கு
ஊட்டும் அவியாகிய உணவின் வகைகளும், முந்நூல் மன்றல் முதல்
நானாவாம் சிறு வேள்வி - பூணூல் மங்கலம் முதலிய பல வகையான சிறிய
வேள்விகளும், நான்மறையோர்க்கு அறுசுவையின் ஆனாத பேர் உண்டி -
நான்கு வேதங்களையுமுணர்ந்த அந்தணர்க்கு அறுசுவையின் நீங்காத
பேருண்டிகளும், துறவு அடைந்தோர்க்கு அருத்து பலி - துறவிகளுக்கு
ஊட்டுந் திருவமுதும், ஆதி - முதலாகிய, பல வேறு தருமம் நனி
தழைவித்தான் - பல வேறு வகையான தருமங்களை மிகவும் பெருகச்
செய்தனன்.

     நானா - பல. தான் : அசை. தான ஆதி எனப் பிரித்து, பல்வகைத் தானம் முதலிய என்றுரைத்தலுமாம். (10)

எவரேனு முருத்திரசா தனங்கண்டா லெதிர்வணங்கி
அவரேநம் பிறப்பறுக்க வடிவெடுத்த வரனென்று
கவராத வன்புள்ளங் கசிந்தொழுக வருச்சித்துச்
சுவையாறி னமுதருத்தி யெஞ்சியவின் சுவைதெரிவான்.