II


196திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



பொருநரே றனையா னேர்ந்து போந்துநான் மாடக் கூடற்
கருணைநா யகனைத் தாழ்ந்து கைதொழு திரந்து வேண்டிப்
பரவிமீண் டொளிவெண் டிங்கட் பன்மணிக் குடைக்கீ ழேகிக்
குருமதி மருமான் கோயிற் குறுகினான் குறுகு மெல்லை.

     (இ - ள்.) பொருநர் ஏறு அனையான் ஏர்ந்து போந்து - வீரருள்
ஆண் சிங்கம் போன்ற சுந்தர சாமந்தன் எழுந்து சென்று, நான்மாடக் கூடல்
கருணை நாயகனைத் தாழ்ந்து கைதொழுது - நான்மாடக் கூடலில்
வீற்றிருக்கும் அருட்கோமானாகிய சோமசுந்தரக் கடவுளைப் பணிந்து
கைகூப்பி, இரந்து வேண்டிப் பரவி மீண்டு - குறையிரந்து வேண்டித் துதித்து
மீண்டு, ஒளிவெண் திங்கள் பன்மணிக் குடைக் கீழ் ஏகி - ஒளி பொருந்திய
வெள்ளிய சந்திரனை ஒத்த முத்துக் குடையின் கீழ்ச் சென்று, குருமதி
மருமான் கோயில் குறுகினான் - நிறம் பொருந்திய சந்திரன் மரபினனாகிய
பாண்டியன் மாளிகையை அடைந்தான், குறுகும் எல்லை - அங்ஙனம்
அடையும்போது.

     நேர்ந்து எனப் பிரித்து, ஞாயிற்றின் உதயத்தை எதிர்த்து என்றும்
செய்கடன் முற்றி என்றும், திருக்கோயிலை நோக்கி என்றும் உரைத்தலுமாம்.
பன்மணி - பலவாகிய முத்து; விலையேறிய முத்துமாம். திங்கட்குடை என
வியையும். குரு - நிறம். மருமான் - வழித் தோன்றல். (22)

கரைமதி யெயிற்றுச் சங்கு கன்னன்முன் னான வென்றிப்
பிரதம கணமுங் குண்டப் பெருவயிற் றொருவ னாதி
வரைபுரை குறுத்தாட்* பூத மறவருங் குழுமி வீக்கு
குரைகழல் வலிய நோன்றாட் கோளுடை வயவ ராகி.

     (இ - ள்.) கரைமதி எயிற்றுச் சங்கு கன்னன் முன்னான வென்றிப்
பிரமத கணமும் - தேய்ந்த மதி போன்ற பற்களையுடைய சங்கு கன்னன்
முதலிய வெற்றியையுடைய சிவகணங்களும், குண்டப்பெரு வயிற்று ஒருவன்
ஆதி - ஆழ்ந்த பெரு வயிற்றினையுடைய குண்டோதரன் முதலிய, வரை
புரை குறுதாள் பூதமறவரும் குழுமி - மலையை ஒத்த குறிய தாளையுடைய
பூத வீரருங்கூடி, வீக்கு குரை கழல் வலிய நோன்தாள் - கட்டப்பட்ட
ஒலிக்கும் வீரக்கழலையுடைய வலியய பெரிய தாள்களையும், கோள்
உடையவர் ஆகி - வலியினையுமுடைய வீரர்களாகி.

     கரைதல் - தேய்தல்; குறைதல். குண்ட வயிற்றோன் - குண்டோதரன்.
குறுத்தாள் : வலித்தல் விகாரம். வலிய குரைகழல் வீக்கு நோன்றாள் என
இயைத்தலுமாம். (23)


     (பா - ம்.) * குறுந்தாள்.