II


எல்லாம்வல்ல சித்தரான படலம்21



வீசி மாத்திரைக் கோலினை விண்ணினட் டதன்மேல்
ஊசி நாட்டியிட் டூசிமேற் பெருவிர லூன்றி
ஆசி லாடியு மூசிமேற் றலைகிழக் காக
மாசில் சேவடிப் போதுவான் மலர்ந்திடச் சுழன்றும்.

     (இ - ள்.) மாத்திரைக் கோலினை விண்ணில் வீசிநடடு அதன் மேல்
ஊசி நாட்டி இட்டு - மாத்திரைக் கோலை வானிலே வீசி நிறுத்தி
அக்கோலின்மேல் ஊசியை நாட்டிவைத்து, ஊசிமேல் பெருவிரல் ஊன்றி
ஆசில் ஆடியும் - அந்த ஊசியின்மேற் பெருவிரலை ஊன்றி நுண்ணிதின்
ஆடியருளியும், ஊசிமேல் -அவ் வூசியின்மேல், தலை கிழக்கு ஆக மாசுஇல்
சேவடிப் போதுவான் மலர்ந்திடச் சுழன்றும் - தலைகீழாகவும் குற்றமற்ற
சிவந்த திருவடித்தாமரை வானின்கண் மலரவும் சுழன்றாடியும்.

     மாத்திரை - அளவு; குறுந்தடியை மாத்திரைக் கோலென்பது வழக்கு;

"மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே"

என்பது காண்க. இட்டு : அசைநிலை. ஆசு - நுட்பம்; ஆசுஇல் - துன்ப
மில்லையாக என்றுமாம். கிழக்கு என்பது முதற்கண் இப் பொருளில்
வழங்கியே பின் திசைப் பெயராயிற்று; மேற்கு என்பதும் இவ்வாறே. போது
என்றதற் கேற்ப மலர்ந்திட என்றார். மலர்தல் ஈண்டு மேல்நோக்கியிருத்தல்.
(13)

சண்ட வெம்பணிப் பகையெனப் பறந்துவிண் டாவிக்
கொண்ட லைப்பிடித் திடியொடுங் குடித்தநீர் பிழிந்து
கண்ட வர்க்கதி சயம்பெறக் காட்டியுங் காண
விண்ட லத்தினிற் பண்டுபோ லிறைகொள விடுத்தும்.

      (இ - ள்.) சண்ட வெம்பணிப் பகை எனப் பறந்து - கடிய செல
வினையுடைய கொடிய பாம்பின் பகையாகிய கலுழனைப்போலப் பறந்து,
விண் தாவி - வானிற்றாவி, கொண்டலைப் பிடித்து - முகிலைப் பற்றி,
இடியொடும் குடித்த நீர் பிழிந்து - இடியோடு கடலிற் பருகிய நீரினைப்
பிழிந்து, கண்டவர்க்கு அதிசயம் பெறக் காட்டியும் - பார்த்தவர்க்கு
வியப்புத் தோன்றக் காண்பித்தும், காண - அவர்கள் காண, விண்
தலத்தினில் பண்டுபோல் இறை கொள விடுத்தும் - வானின்கண்
முன்போலவே தங்கும்படி அதனை விடுத்தும்.

     சண்டம் - வன்மை; கலுழனுக்கு அடை. இடியொடும் பிழிந்து காட்டி
யென்க. (14)

எல்லி டைப்படும் பொருள்களை யிராவெழப் பார்த்தும்
அல்லி டைப்படும் பொருள்களைப் பகல்வர வமைத்தும்
வல்ல ழற்புன லுளர்வளி வலிகெடப் பார்த்தும்
நல்ல போதுகாய் கனியிலா நாள்படக் கண்டும்.