II


218திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     கருத்த நாண் - மகளிர் நாற்குணத்து ளொன்றாகிய நாண். மருங்குல்
நாண் - மேகலை. சிலையம்பு - கருப்பு வில்லி லேறிட்ட மலர்க்கணை,
கண்ணம்பு - கண்ணீர். வேட்கை நோயால் உடல் மெலிந்தமையால்
வளைகளும் மேகலையும் கழன்றன. விரகவேதனை பொறுக்கலாற்றாது
கண்ணீர் சொரிந்து சோர்ந்தனர். இதனால் மெலிதலும் நாணுவரை யிழத்தலும்,
மயக்கமும் கூறினார். (5)

மடமயி லனையா ரெங்கள் வளையினைத் தருதி ரென்றார் கடல்விட மயின்றா னுங்கள் கந்தரத் துள்ள தென்றான் தடமதிக் கொம்ப னாரெங் கலையினைத் தருதி ரென்றார் முடமதி மிலைந்தா னுங்கண் முகமதி யிடத்த தென்றான்.

     (இ - ள்.) மடமயில் அனையார் - இளமையாகிய மயிலை யொத்த
அம்மகளிர், எங்கள் வளையினைத் தருதிர் என்றார் - எங்கள் வளையைத்
தாரும் என்று கேட்டனர்; கடல் விடம் அயின்றான் - கடலிற்றோன்றிய
நஞ்சினையுண்ட நாயகன், உங்கள் கந்தரத்து உள்ளது என்றான் - (அது)
உங்கள் கழுத்தில் உள்ளது என்று விடையறுத்தான்; தடம் மதிக் கொம்பு
அன்னார் - நிறைந்த மதியினையுடைய பூங்கொம்புபோன்ற அம்மாதரார், எம்
கலையினைத் தருதிர் என்றார் - எமது கலையைக் கொடுத்து விடுமென்று
கேட்டனர்; முடம்மரி மிலைந்தான் - வளைவாகிய பிறையை யணிந்த
பெருமான். நுங்கள் முகமதி இடத்தது என்றான் - (அது) உங்கள் முகமாகிய
சந்திரனிடத்துள்ளது என்று விடையறுத்தான்.

     வளை என்பது வளையலுக்கும் சங்கிற்கும், கலை என்பது மேகலைக்கும்
சந்திரகலைக்கும் சிலேடை. மகளிர் கழுத்துச் சங்குபோல்வ தாகலின் ‘உங்கள்
கந்தரத்துள்ளது’ என்றானென்க. தடமதிக் கொம்பனார் என்றது
இல்பொருளுவமை. கலை : முதற்குறை; ஆடை யென்றுமாம். நீர் வவ்விய எம்
வளையையும் கலையையும் தருவீராக என்று மகளிர் தம் காமவேட்கை
புலப்படக் கூறாநிற்க, அவ்வேட்கை சிறிதும் பற்றப் பெறாதவனாகிய இறைவன்
அவர் கூறியவற்றுக்கு வேறு பொருள் கற்பித்துக் கொண்டு, வளையும் கலையும்
நும்மிடத்தவே யாகவும் நீர் எம்மை வினாவுவ தென்னையென நகையாடினன்.
காமக் குறிப்பிலனாய இறைவன் அக்குறிப்புடையான் போன்று நடித்தன
னென்க. (6)

இடையறிந் தெம்மைச் சேர்மி னென்றன ரிளைய ரெங்கோன் கடலமு தனையீர் நுங்கட் கிடையினிக் காணா தென்றான் மடநலா ரஃதேற் பண்டை வண்ணமீந் தில்லிற் செல்ல விடையளித் தருண்மி னென்றார் வேலைபுக் குறங்கு மென்றான்.

     (இ - ள்.) இளையர் - அம்மங்கையர், இடை அறிந்து எம்மைச்
சேர்மின் என்றனர் - செவ்வி யறிந்து எம்மைச் சேரும் என்று வேண்டினர்;
எம் கோன் - எம் பெருமான், கடல் அமுது அனையீர் - கடலிற் றோன்றிய