அமுதத்தை ஒத்த பெண்களே,
நுங்கட்கு இனி இடை காணாது என்றான் -
உங்களுக்கு இனி இடைகாணப்பெறாது என்று கூறினன்; மடநலார் -
மடப்பத்தையுடைய அம் மகளிர், அஃதேல் பண்டை வண்ணம் ஈந்து -
அங்ஙனமாயின் எமது முன்னை நிறத்தைக் கொடுத்து, இல்லில் செல்ல விடை
அளி தருண்மின் என்றார் - எங்கள் வீட்டிற் செல்ல விடை கொடுத்தருளும்
என்று வேண்டினர்; வேலை புக்கு உறங்கும் என்றான் - (அவன் அது)
கடலிற் சென்று தூங்கும் என்று கூறினான்.
இடை
என்பது சமயத்திற்கும் மருங்குலுக்கும், விடை என்பது
உத்தரவிற்கும் இடபத்திற்கும் சிலேடை. இடை சமயம் என்னும் பொருளாதலை
"உடையோர்போல இடையின்று குறுகி" என்பதனாலறிக. காணாது -
காணப்படாது. மடம் - மகளிர் நாற்குணத்துளொன்று. நல்லார்
என்பதுதொக்கது. இப்பொழுது நிறம் பசந்து வேறுபட்டிருத்தலின் பண்டை
வண்ண மீந்து என்றார். கூடினாலன்றிப் பண்டை வண்ணம்
எய்துமாறின்மையின், அதனையே வேறோராற்றாற் கூறினாராயிற்று. வண்ணம்
-தன்மை யென்றுமாம். இறைவர்க்கு ஊர்தியாகிய விடை திருமால் ஆகலின்
வேலைபுக் குறங்கும் என்றனன். கடலமுதனையீர் என்றது நயப்புத் தோன்றக்
கூறியது. (7)
நங்கையர் கபாலிக் கென்று நடுவிலை போலு மென்றார்
அங்கண னடுவி லாமை நும்மனோர்க் கடுத்த தென்றான்
மங்கைய ரடிக ணெஞ்சம் வலியகற் போலு மென்றார்
கொங்கலர் கொன்றை யானுங் கொங்கையே வன்க லென்றான். |
 (இ
- ள்.) நங்கையர் - அம்மகளிர், கபாலிக்கு என்றும் நடு இலை
போலும் என்றார் - இக்காபாலிக்கு எப்பொழுதும் நடுவில்லைபோலும்
என்றனர்; அங்கணன் - இறைவன், நடு இலாமை நும் அன்னோர்க்கு
அடுத்ததுஎன்றான் - நடுவில்லாமை நும்மைப்போல்வார்க்கே பொருந்தியது
என்றனன்; மங்கையர் - அப்பெண்கள், அடிகள் நெஞ்சம்வலிய கல்போலும்
என்றார் - அடிகளின் நெஞ்சமானது வலிய கல்லை யொக்கும் என்று
கூறினார்; கொங்கு அலர் கொன்றையான் - மகரந்தத்தோடு மலர்ந்த
கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான், நும் கொங்கையே வன்கல்
என்றான் - நுங்கள் கொங்கையே வலிய கல்லாகும் என்று கூறினன்.
 நடு
என்பது நடுவு நிலைமைக்கும் இடைக்கும் சிலேடை. நடுவுடைய
ராயின் பிறர் துன்பத்தைத் தம்மையுற்ற துன்பம்போற் கருதி நீக்க லுறுவர்;
இவன் அங்ஙனஞ் செய்யாமையின் நடுவிலனாவன் என்று மகளிர் கூற, நடு
என்பதற்கு மருங்குல் என்று பொருள் கொண்டு நடுவிலாமை நும்மனோர்க்கே
அடுத்ததென்று இறைவன் கூறினன். இடை இல்லை யென்னுமாறு
நுண்ணிதாதல் குறித்து நடுவிலாமை என்றார். கற்போலும் என்றதில்
போலும் ஒப்பில் போலியுமாம். வன்கல் - மலை உவமமாகலின் கொங்கையே
வன்கல் என்றனனென்க. (8)
|