II


220திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



காதுவே லன்ன கண்ணார் கங்கைநீர் சுமந்த தேதுக்
கோதுமி னென்றா நும்பா லுண்பலி யேற்க வென்றான்
ஏதுபோ லிருந்த தைய னிசைத்தசெப் பென்றா ரீசன்
கோதுறா வமுதன் னீர்நுங் கொங்கைபோ லிருந்த தென்றான்.

     (இ - ள்.) காதுவேல் அன்ன கண்ணார் - கொலைபுரியும் வேலினை
ஒத்த கண்களையுடைய அம் மகளிர், கங்கை நீர் சுமந்தது ஏதுக்கு ஓதுமின்
என்றார் - நீர் கங்கை தாங்கியது எதன் பொருட்டு என்று வினவினர்;
நும்பால் உண் பலி ஏற்க என்றான் - (இறைவன்) அது நும்மிடத்து உண்ணும்
பலியை ஏற்பதற்கு என்று விடை யிறுத்தான்; ஐயன் இசைத்த செப்பு ஏது
போலிருந்தது என்று கூறினர்; ஈசன் - இறைவன், சோது உறா அமுது
அன்னீர் - குற்றமில்லாத அமுதம் போன்றவர்களே, நும் கொங்கைபோல்
இருந்தது என்றான் - (அது) நுமது கொங்கை போல இருந்ததென்று கூறினன்.

     கங்கை, செப்பு என்பன சிலேடைப் பொருளன. கங்கை நீர் சுமந்தது
- நீர் கங்கையாற்றைத் தரித்தது, நீர் கையிலே பிரம கபாலத்தை ஏந்தியது;
கம் - தலை. செப்பு - விடை, கிண்ணம். நீர் கங்கை யாற்றினைத்
தரித்திருந்தும் தண்ணளியுடையீரல்லீர் என்பது தோன்ற ‘கங்கை நீர் சுமந்த
தேதுக்கு’ என மங்கையர் கூறினர். தம் வினாவிற்கு ஏற்ற விடையன்
றென்பார் ‘ஏதுபோலிருந்ததைய னிசைத்த செப்பு’ என்றனர். (9)

கறுத்ததை யெவன்கொ லைய கந்தர மென்றார் வேளை
வெறுத்தவன் மாரி பெய்தற் கென்றனன் விழியால் வேலை
ஒறுத்தவர் யாவ தென்றீ ருத்தர மென்றார் கூற்றைச்
செறுத்தவன் றென்பா னின்று நோக்கினாற் றெரிவ தென்றான்.

     (இ - ள்.) ஐய - ஐயனே, கந்தரம் கறுத்தது எவன் கொல் என்றார்
- கந்தரம் கறுத்தது யாது காரணம் என்று மங்கையர் வினவினர்; வேளை
வெறுத்தவன் - மன்மதனை யெரித்த பெருமான், மார் பெய்தற்கு என்றனன்
- மழை பெய்தற்கு என்று விடை யிறுத்தான்; விழியால் வேலை ஒறுத்தவர்
- கண்களால் வேற்படையை வென்ற அம்மகளிர், உத்தரம் யாவது என்றீர்
என்றார் - உத்தரம் எதுவென்று கூறினீர் என்றனர்; கூற்றைச் செறத்தவன்
- காலனை உதைத்த இறைவன், தென்பால் நின்று நோக்கினால் தெரிவது
என்றான் - (அது) தெற்கே நின்று எதிர் முகமாக நோக்கின் தெரியப்
பெறுவது என்று கூறினன்.

     கந்தரம் மிடற்றுக்கம் மேகத்திற்கும், உத்தரம் விடைக்கும் வடக்கிற்கும்
சிலேடை. இவற்றை முறையே மிடறு விடை என்னும் பொருள்களில் வைத்து
மகளிர் வினவ, இறைவன் இவற்றுக்கு மேகம் வடக்கு எனப் பொருள்
கொண்டு விடையிறுத்தனன். கறுத்ததை, ஐ : சாரியை. கொல் : அசை. (10)