II


வளையல்விற்ற படலம்221



செக்கரஞ் சடையான் கண்ணிற் றம்முருத் தெரிய நோக்கி
இக்கொடி யார்போற் கண்ணு ளெம்மையு மிருத்தி ரென்றார்
நக்கனுந் தனையன் னார்கண் ணிடைக்கண்டு நகைத்து நம்மின்
மிக்கவர் நுங்க ணுள்ளார் விழித்தவர்க் காண்மி னென்றான்.

     (இ - ள்.) செக்கர் அம் சடையான் கண்ணில் - (அம்மகளிர்) சிவந்த
அழகிய சடையையுடைய இறைவன் கண்களில், தம் உருத் தொய நோக்கி
- தங்கள் வடிவம் புலப்பட நோக்கி, இக்கொடியார் போல் - இந்தக்
கொடிபோன்ற மகளிரைப்போல, கண்ணுள் எம்மையும் இருத்திர் என்றார்
- நும் விழியுள் எம்மையும் வைத்துக்கொள்ளும் என்று வேண்டினர்; நக்கனும்
- இறைவனும், தனை அன்னார் கண் இடைக்கண்டு - தன்னை
அப்பெண்களின் விழியுட் கண்டு, நகைத்து- சிரித்து, நம்மின் மிக்கவர்
நும்கண் உள்ளார் - நம்மைப்போல் அழகில் மிக்கார் நும் கண்களில்
உள்ளார், விழித்து அவர்க் காண்மின் என்றான் - செவ்வனே விழித்து
அவரைப் பாருங்கள் என்று கூறினன்.

     தமக்கு மாறாக இருக்கின்றனர் என்னுங் கருத்தால் கொடுமை யுடையார்
என்னும் பொருள் தோன்றவும் ‘கொடியார்’ என்றார். இருத்திர் - இருத்துவீர்.
நும் கண்ணுளே பிறரை வைத்துக் கொண்டிருக்கும் நீவிர் எம்மை இங்ஙனம்
வேண்டுவதென்னென்று இறைவன் நகைத்தனன். இவற்றால் ஒருவரை யொருவர்
பருகுவார்போல் நோக்கினமை புலனாம். இறைவன் காம மயக்கமின்றியே
விளையாடுகின்றானாகலின் நகைத்தனன் என்க. நம்மைக்காட்டினும் மிக்கவர்
என்று பொருள் கொண்டு, நீர் பிறரைக் கண்ணுள் வைத்திருப்பது நம்மினும்
மிக்காரென்னுங் கருத்தாலாம் என்பது தோன்றக் கூறினானென்னலுமாம்.
கண்ணுள் இருப்பவரை விழித்துக் காண்மின் என்றது நகைச்சுவையுடைத்து.
"கண்ணுளார் நுங்காதலர்" என்னும் சிந்தாமணிச் செய்யுள் இங்கு
நினைக்கற்பாலது. (11)

அஞ்சலிப் போது பெய்வார் சரணமென் றடியில் வீழ்வார்
தஞ்செனத் தளிர்க்கை நீட்டித் தழுவிய கிடைக்குந் தோறும்
எஞ்சுவா னெஞ்சா தேத்தி யெதிர்மறை யெட்டுந் தோறும்
வஞ்சனா யகல்வான் மையல் வஞ்சியர்க் கணிய னாமோ.

     (இ - ள்.) அஞ்சலிப் போது பெய்வார் - (அம் மகளிர்) அஞ்சலியாகிய
மலரைச் சொரிவாராய், சரணம் என்று அடியில் வீழ்வார் - அடைக்கல
மென்று திருவடியில் வீழ்ந்து, தஞ்சம் எனத் தளிர்க்கை நீட்டி - பின்பு நீரே
துணை என்று தணிர் போன்ற கைகளை நீட்டி, தழுவிய கிடைக்குந் தோறும்
-தழுவ நெருங்குந்தோறும், எஞ்சுவான் அப்பாற் படுவானாயினன், எஞ்சாது
ஏத்தி எதிர்மறை எட்டுந்தோறும் வஞ்சனாய் அகல்வான் - சலிக்காது துதித்து
எதிர்கின்ற வேதங்கள் எட்டுந்தோறும் வஞ்சனாய் அகப்படாது நீங்கும்
பொருமான், மையல் வஞ்சியர்க்கு அணியன் ஆமோ - காம
மயக்கத்தையுடைய பெண்களுக்கு அண்மையனாவனோ?