II


வளையல்விற்ற படலம்227



ஒழுக - கரிய கூந்தலின்மே னின்று சுரங்குந் தேன் ஒழுகவும், நுடங்கிவரும்
மின்போல் அடைந்து கண்டார்கள் - அசைந்து வருகின்ற மின்னல்போலச்
சென்று பார்த்தார்கள்.      இடுவார் இரண்டனுள் முன்னது பெயர்; பின்னது
வினையெச்சப் பொருட்டு. வெம்மை - விருப்பம், குழல்மேல் சுரும்புபாடவும்
கள் ஒழுகவும் என்க. நுடங்கி வருமின்போல் என்றது இல்பொருளுவமை..
(22)

கண்ட வடிவாற் றிளைப்பதற்குக் கழிபே ரன்பு காதல்வழிக்
கொண்டு செல்ல வொருசார்தங் குணனா நாண முதனான்கும்
மண்டி யொருசார் மறுதலைப்ப மனமு முழன்று தடுமாற
அண்டர் பெருமான் விளையாடற் கமையச் சூழ்ந்தா                                       ரமுதனையார்.

     (இ - ள்.) கண்ட வடிவால் திளைப்பதற்கு - நோக்கிய
அவ்வடிவுடன்கூடி இன்பம் நுகர்தற்கு, கழிபோ அன்பு - மிகவும் பெரிய
அன்பானது, ஒருசார் காதல் வழிக்கொண்டு செல்ல - ஒரு பக்கம் ஆசையின்
வழியே கொண்டுபோக, ஒரு சார் தம் குணன் ஆம் நாணம் முதல் நான்கும்
மண்டி மறுதலைப்ப - மற்றொரு பக்கம் தங்கள் குணமாகிய நாண் முதலிய
நான்கும் நெருங்கித் தடுப்ப, மனமும் உழன்று தடுமாற - (அதனால்) மனமும்
சுழன்று தடுமாற, அண்டர் பெருமான் விளையாடற்கு அமைய - தேவர்
பிரானாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடலுக்குப் பொருந்த. அமுது
அனையார் சூழ்ந்தார் - அமுதினை ஒக்க அம்மகளிர் சூழ்ந்து மொய்த்தனர்.

     வடிவால் - வடிவொடு கூடி; ஆல் ஒடுவின் பொருட்டாயது.
அகண்டனாகிய இறைவனைத் தமது கண்ட வடிவால் திளைப்பதற்கு
என்னும் தொனிப்பொருளும் கொள்க. கழி என்னும் உரிச்சொல் அன்பின்
பெருமையைச் சிறப்பித்து நின்றது நான்கு - நாண், மடம், அச்சம், பயிர்ப்பு.
ஒரு சார் கொண்டு செல்ல ஒருசார் மறுதலைப்ப அதனால் மனம் தடுமாறா
நிற்கவும் சூழ்ந்தார் என்க. மறுதலைப்ப என்பது மறுதலிப்ப என வழங்கும்.
(23)

[கலிவிருத்தம்]
இரங்குமே கலைசிலம் பன்றி யேனைய
விரும்பிய குழைதொடி மின்செய் கண்டிகை
மருங்கிறச் சுமப்பினும் வளைகைக் கில்லெனின்
அரும்பிய முலையினார்க் கழகுண் டாகுமோ.

     (இ - ள்.) இரங்கும் மேகலை சிலம்பு அன்றி - ஒலிக்கின்ற
மேகலையும் சிலம்பும் அல்லாமலும், ஏனைய - அவை ஒழிந்த, விரும்பிய
குழைதொடி மின்செய் கண்டிகை - விரும்பப்பட்ட குழையும் தொடியும்
ஒளிவீசுங் கண்டிகையுமாகிய இவற்றை, மருங்கு இற சுமப்பினும் - இடை
முறியுமாறு தாங்கினாலும், கைக்கு வளை இல் எனின் - கைகளுக்கு வளையல்
இல்லையானால், அரும்பிய முலையினார்க்கு - முகிழ்த்த தனங்களை யுடைய
மகளிர்க்கு, அழகு உண்டாகுமோ - அழகுண்டாகுமோ?