II


அட்டமாசித்தி யுபதேசித்த படலம்235



     தன் குலத்திற்கு அணிகலன் போன்றவன் என்னும் காரணப்
பெயருடையான் என்பார் ‘விழுப்பெருங் குலத்தினிற் றென்னவன்’
என்றார். திருக்கைலை ஊழிதோறு முயர்தல்,

"ஊழிதோ றூழிமுற்று முயர்பொன் னொடித்தான் மலையே"

என்று தம்பிரான் றோழரால் அருளிச் செய்யப்பெற்றுளது; முன்பும்
வந்தமை காண்க. பராரை : மரூஉ முடிபு. (2)

அடுப்ப மாசில் வெள்ளி வெற்பி னருகி ருக்கு மரகதங்
கடுப்ப வாம மிசை யிருந்து கனக வெற்பன் மகளெனும்
வடுப்ப டாத கற்பி னாண்ம டித்து வெள்ளி லைச்சுருள்
கொடுப்ப நேச மூறுபோக குரவ னாகி வைகினான்.

     (இ - ள்.) அடுப்ப - தங்கியருள,மாசு இல் வெள்ளி வெற்பின்
அருகு இருக்கும் மரகதம் கடுப்ப - குற்றமில்லாத வெள்ளி மலையின்
பக்கத்திலிருக்கும் மரகதத்தையொப்ப, வாமமிசை இருந்து -
வலப்பாகத்திலிருந்து, கனக வெற்பன் மகளெனும் வடுப்படாத
கற்பினாள் - மலையரையன் புதல்வியாகிய குற்றமில்லாத கற்பினையுடைய உமையம் மையார், வெள்ளிலைச் சுருள்மடித்துக் கெடுப்ப - வெற்றிலைச்
சுருளை மடித்துக் கொடா நிற்க, நேசம் ஊறுபோக குரவனாகி வைகினான்
- (அவ்விறைவன்) அன்பு சுரக்கும் போக குரவனாய் இருந்தருளினான்.

     நிழல் மருங்க அடுப்ப எனக் கூட்டுக. இமயம் பொன்மலை
யெனப்படும் ஆகலின் மலையரையனைக் ‘கனக வெற்பன்’ என்றார்.
வெள்ளிலை வெறுவிதாகிய இலை. இறைவன் போகம் நுகர்தல்
உயிர்களுக்குப் போக நுகர்ச்சி காட்டுங் கருத்தால் ஆகலின் ‘போக
குரவனாகி’ என்றார்;

"போகமா யிருந்தயிர்க்குப் போகத்தைப் புரித லோரார்"

என்பதுங் காண்க. (3)

பிருங்கி நந்தி யேமு தற்பெ ருந்த கைக்க ணத்தரும்
மருங்கி ருந்த சனக னாதி மாத வத்தர் நால்வரும்
ஒருங்கி றைஞ்சி யுண்ண வுண்ண வமுத மூறு சிவகதைக்
கரும்ப ருந்த வாய்ம லர்ந்து கருணை செய்யு மெல்லைவாய்.

     (இ - ள்.) பிருங்கி நந்தி முதல் பெருந்தகைக் கணத்தரும் -
பிருங்கியும் திருநந்தி தேவரும் முதலிய பெருந்தகுதியையுடைய
சிவகணத்தலைவரும், மருங்கு இருந்த சனகன் ஆதி மாதவத்தர் நால்வரும்
- அருகில் இருந்த கனகன் முதலிய பெரிய தவத்தினையுடைய முனிவர்
நால்வரும், ஒருங்கு இறைஞ்சி - ஒரு சேர வணங்கி, உண்ண உள்ள
அமுதம் ஊறு - உண்ணுந்தோறும் அமுதம் ஊற்றெடுக்கும், சிவகதைக்
கரும்பு அருந்த - சிவகதையாகிய கரும்பினைச் (செவிவாயால்) உண்ண,
வாய் மலர்ந்து கருணை செய்யும் எல்லைவாய் - திருவாய் மலர்ந்து
அருள் புரியும் பொழுதில்.

     ஒருங்கிறைஞ்சி அருந்த எனக் கூட்டுக. (4)