II


24திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



பல்விலங்கினை - இரண்டு கொம்பினையுடைய யானை முதலிய பல
விலங்குகளையும், ஒன்றை ஒன்றாக ஞான நோக்கினால் நோக்கியும் - ஒன்று
மற்றொன்றாமாறு ஞானப்பார்வையாற் பார்த்தருளியும், நாடிய இளையோர் -
பார்த்த இளமைப் பருவத்தினையுடைய ஆடவர், மானின் நோக்கியர்
ஆகிலோமென - மான்போன்ற பார்வையினையுடைய மகளிராக நாம் பிறக்க
வில்லையே எனக் கவல, எழில் வாய்ந்தும் - கட்டழகினைப் பொருந்தியும்.

     ஒன்றை யென்பதில் ஐகாரம் சாரியை. இவனை அணைதற்கு மாதராகப்
பிறந்திலோமேயென என்க;

"ஆடவர் பெண்மையை யவாவுந் தோளினாய்"

என இராமாயணங் கூறுவதுங் காண்க. இது வசியம் எனப்படும். (19)

நாக நாடுபொன் னாட்டுள பொருளுமந் நகருள்
ஆக வாக்கியு மின்னணம் விச்சைக ளனந்தம்
மாக நாயகன் மலைமக ணாயகன் மதுரை
ஏக நாயகன் றிருவிளை யாடல்செய் திருந்தான்.

     (இ - ள்.) நாக நாடு பொன் நாடு உள பொருளும் அந்நகருள் ஆக
ஆக்கியும் - பாதலத்திலும் பொன்னுலகத்திலும் உள்ள பொருள்களும்
அம்மதுரைப் பதியில் உண்டாகுமாறு செய்தும், இன்னணம் அனந்தம்
விச்சைகள் - இங்ஙனம் அளவில்லாத வித்தைகளை, மாகநாயகன் - சிவ
லோக நாயகனும், மலைமகள் நாயகன் - பார்வதி தலைவனும், மதுரை
ஏகநாயகன் - மதுரையிலெழுந்தருளியுள்ள ஒப்பற்ற இறைவனுமாகிய
சோமசுந்தரக் கடவுள், திருவிளையாடல் செய்து இருந்தான் -
திருவிளைாயடலாகப் புரிந்து இருந்தருளினன்.

     பாதலத்துப் பொருள் பொன்னாட்டுப் பொருளாகவும் பொன்னாட்டுப்
பொருள் பாதலத்துப் பொருளாகவும் எனப் பிறர் பொருள் கூறுவாராயினர்;
சொற்கள் அதற்கேற்றவாறில்லாமை காண்க. (20)

சித்த யோகிகள் செய்கின்ற வாடன்மேற் செலுத்தி
வைத்த கண்களுஞ் சிந்தையும் வாங்கலர் திகைத்துத்
தத்த மாள்வினைத் தொழிமறந் திருந்தனர் தகைசால்
முத்த வேதிய ராதிய முதுநகர் மாக்கள்.

     (இ - ள்.) தகைசால் முத்த வேதியர் ஆதிய முது நகர் மாக்கள் -
தகுதிமிக்க முத்தத்தன்மையையுடைய அந்தணர் முதலிய தொன்மை யுடைய
மதுரைப் பதியிலுள்ள மாந்தர்கள், சித்த யோகிகள் செய்கின்ற ஆடல்மேல்
செலுத்தி வைத்த - யோக சித்தமூர்த்திகள் செய்தருளும்
திருவிளையாடலின்மேற் செலுத்தி வைத்த, கண்களும் சிந்தையும் வாங்கலர் -
கண்களையும் உள்ளத்தினையும் மீட்க முடியாதவர்களாய், திகைத்து -
திகைப்புற்று, தத்தம் ஆள்வினைத் தொழில் மறந்திருந்தனர் - தத்தமக்குரிய
தொழில் முயற்சிகளை மறந்திருந்தார்கள் எ - று.