II


252திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



இழுதொ டுஞ்சுவை யமுது பொற்கல னிட்டு ணாதிரு கண்கணீர்
வழிய வந்து விலக்கு வாரின் வளைந்த தாறு பகற்செயும்
பொழுதெ ழும்பொழு தோம றுக்கம் விளைக்கு மேயிகல் பூழியன்
வழுதி யன்றியும் வையை யும்பகை யான தென்று வருந்துவான்.

     (இ - ள்.) இழுதொடும் சுவை அமுது பொன்கலன் இட்டு -
நெய்யோடு சுவை மிக்க அமுது (பசித்தவனுக்குப்) பொற்கலத்தில் இட்டிருக்க,
உண்ணாது இரு கண்கள் நீர் வழிய - (அவன் அதனை) உண்ணப் பெறாமல்
இரண்டு விழிகளினின்றும் நீர் சொரியுமாறு, வந்து விலக்கு வாரின் - வந்து
விலக்கு வாரின் - வந்து தடுப்பவரைப்போல, ஆறு வளைந்தது - இந்நதி
தடுத்தது, பகல் செயும் பொழுது எழும் பொழுதோ - பகலைச் செய்யும்
சூரியன் உதிக்கும் பொழுது வந்தாலோ, இகல் பூழியன் மறுக்கம் விளைக்கும்
- பகை கொண்டுள்ள பாண்டியன் துன்பஞ் செய்வான், வழுதி அன்றியும்
வையையும் பகை ஆனது என்று வருந்துவான் - பாண்டியனே அல்லாமல்
இவ் வையை யாறும் பகையாயிற்று என்று வருந்தினான்.

     இட்டு என்பதற்கு இடப்பட்டிருக்க என்று பொருள் கூறுக.
‘கைக்கெட்டியது வாய்க் கெட்டவில்லை’ என்னும உலக வசனம் இங்கே
கருதற்பாலது. பகற் செயும் பொழுது - பகலைச் செய்யும் ஞாயிறு. இகல்
பூழியன் - மாறுபாடு கொண்ட பாண்டியன் : வினைத்தொகை. (11)

வெள்ள நோக்கி யழுங்கு செம்பியன் மெலிவு நோக்கி
                                   விரைந்தெழீஇக்
கள்ள நோக்கி லகப்ப டாதவர் கனவு போலவ னனவில்வந்
துள்ள நோக்குடை யன்ப ருக்கரு ளுருவ மாகிய சித்தர்தாம்
பள்ள நோக்கி வரும்பெ ரும்புனல் வற்ற நோக்கினர் பார்த்தரோ.

     (இ - ள்.) கள்ள நோக்கில் அகப்படாதவர் - கரவினையுடைய
பார்வைக்குக் கிட்டாதவராகிய சோமசுந்தரக் கடவுள், வெள்ளம் நோக்கி
அழுங்கு செம்பியன் மெலிவு நோக்கி - வெள்ளத்தைக் கண்டு மனம்
வருந்தும் சோழனது துன்பத்தைப் பார்த்தருளி, கனவுபோல் அவன் நனவில்
விரைந்து எழீஇ வந்து - கனவின்கண் வந்ததுபோல அவன் நனவின்
கண்ணும் விரைந்து எழுந்து வந்து, உள்ள நோக்கு உடை அன்பருக்கு -
ஞானக் கண்ணாகிய அகப் பார்வையினையுடைய அன்பர்கட்கு, அருள்
உருவம் ஆகிய சித்தர்தாம் - கருணை வடிவாய்த் தோன்றி யருளும்
சித்தமூர்த்தி, பள்ளம் நோக்கி வரும் பெரும் புனல் - பள்ளத்தினை நோக்கி
வருகின்ற வெள்ளநீரை, பார்த்து வற்ற நோக்கினர் - நோக்கி வற்றுமாறு
திருவுளங் கொண்டனர்.

     கள்ள நோக்கில் அகப்படார் என்ற கருத்தை,

"உள்ள முள்கலந் தேத்தவல் லார்க்கலாற்
கள்ள முள்ளவ ருக்கருள் வானலன்"

என்பது முதலிய அருள் வாக்குகளிற் காண்க. நோக்கினர் - கருதினார்.
அரோ : அசை. (12)