II


விடையிலச்சினையிட்ட படலம்257



     (இ - ள்.) மற்றை மூன்று வாயில்களினும் - ஏனை மூன்று வாயில்
களினும், வல்லைபோய் உற்று நோக்கினர் - விரைந்துசென்று உற்றுப்
பார்த்து, தாம் நென்னல் ஒற்றிய - தாம் நேற்று வைத்த, கொற்ற மீனக்குறி
பிழையாமை கண்டு - வெற்றி பொருந்திய கயல் முத்திரை பிறழாமையைக்
கண்டு, இது எற்று ஆம் கொல் என்று - இது யாதாய் முடியுமோ என்று,
ஏந்தல் முன் எய்தினார் - மன்னன் முன்னே சென்றனர்.

     நோக்கினர் : முற்றெச்சம். ஒரு புறம் குறி பிறழ்ந்திருத்தலின் முடிபு
யாதாகுமோ எனத் துணுக்குற்றா ரென்க. (21)

போற்றி மன்னநம் பொன்னங் கயற்குறி
மாற்றி யுத்தர வாயிற் கதவதில்
ஏற்றி லச்சினை யிட்டவர் யாரையென்
றாற்றல் வேந்த வறிகிலம் யாமென்றார்.

     (இ - ள்.) மன்ன போற்றி - வேந்தனே வணக்கம், உத்தரவாயில்
கதவில் - வடக்கு வாயிற் கதவின்கண், நம் பொன் அம் கயற்குறி மாற்றி -
நமது அழகிய மீனக்குறியை மாற்றி, ஏற்று இலச்சினை இட்டவர் யார் என்று -
விடைக் குறியினை இட்டவர் யார் என்று, ஆற்றல் வேந்த அறிகிலம் யாம்
என்றார் - வலியமைந்த வேந்தனே! யாங்களறியோம் என்று கூறினர்.

     யற்குறி மாற்றி ஏற்றிலச்சினை இடப்பட்டுளது, அங்ஙனம் இட்டவர்
யாரென அறிகிலம்; என விரித்துரைக்க. பொன் அம் எனும் இரண்டும்
அழகினை உணர்த்தின; அம் சாரியையுமாம். கதவதில், அது :
பகுதிப்பொருள் விகுதி. யாரை, ஐ : சாரியை. (22)

வையை நாடனும் வந்தது நோக்குறீஇ
ஐய வின்னதோ ரற்புத மாயையைச்
செய்ய வல்லவர் யாரெனத் தேர்கிலான்
ஐய மெய்தி யகன்மனை நண்ணினான்.

     (இ - ள்.) வையை நாடனும் வந்து அது நோக்குறீஇ - வையை யாறு
பாயும் நாட்டையுடைய பாண்டியனும் வந்து அதனை நோக்கி, ஐய இன்னது
ஓர் அற்புத மாயையை - வியப்பினையுடைய இந்த அதிசய மாயையை,
செய்ய வல்லவர் யார் எனத் தேர்கிலான் ஐயம் எய்தி - செய்தற்கு வல்லவர்
யாரென்று தெரியாது ஐயுற்று, அகல்மனை நண்ணினான் - அகற்சி
பொருந்திய தனது கோயிலை அடைந்தான்.

     அளபெடை சொல்லிசை நிறைக்க வந்தது. ஐய ஐ என்னும்
வியப்புணர்த்தும் உரிச்சொல்லடியாகப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம்.
தேர்கிலான் : முற்றெச்சம். (23)