II


கல்லானைக்குக் கரும்பருத்திய படலம்29



     செயவெனெச்சமாக்குக. காஞ்சுகி - சட்டையிட்ட மெய் காவலர்;
கஞ்சுகம் சட்டை. காஞ்சுகியராகிய மாக்கள் என்க. (4)
 

சீறிட்ட வேங்கை யதட்சேக்கையர் சீறி யைந்தும்
பாறிட்ட வேடர் யோகபட்டத்தர் கட்டங் கத்தில்
ஏறிட்ட கைய ரிறுமாந்திருப் பாரை நோக்கி
மாறிட்டு நீக்கி* யெழப்போகென வந்து சொன்னார்.

     (இ - ள்.) சீறிட்ட வேங்கை அதள் சேக்கையர் - சீறிய வேங்கையின்
தோலாகிய தவிசினையுடையராய், ஐந்தும் சீறிப் பாறிட்ட வேடர் -
ஐம்புலன்களையும் சினந்து ஓட்டிய திருவேடத்தினை யுடையராய், யோக
பட்டத்தர் - யோக பட்டிகை யுடையராய், கட்டங்கத்தில் ஏறிட்ட கையர் -
மழுப்படையில் ஏற்றிய திருக்கரத்தினை யுடையராய், இறுமாந்து இருப்பாரை
நோக்கி - இறுமாந்திருப்பவரைப் பார்த்து, வந்து - நெருங்கி வந்து, மாறு
இட்டு நீக்கி எழப் போக எனச் சொன்னார் - பிரம்பினை நீட்டி
அவ்விடத்தை விட்டு எழுந்துபோகக் கடவீர் என்று சொன்னார்.

     சீறிட்ட - சிறிய; இடு : அசை, பாறிட்ட - பாற்றிய. ஏறிட்ட - ஏற்றிய.
சேர்க்கையர் முதலிய குறிப்பு முற்றுக்கள் வினையெச்சமாயின. ஐந்து :
தொகைக் குறிப்பு. பாற்றின்மை தோற்றுவிக்கும் வேடம். கட்டங்கத்திற்கு முன்
உரைத்தமை காண்க. மாறிட்டு நீக்கல் - பிரம்புகொண்டு நீங்குமாறு குறித்துக்
காட்டல். எழப் போதல் - அகலப்போதல். போகென : தொகுத்தல். (5)

பின்னா வருதென் னர்பிரான்பெரி யோரை நோக்கி
என்னோடு நும்மூ+ருமக்கென்வரும் யாது வேண்டும்
நுந்நாம மேது நுவன்மின்னென வைய ரெந்த
நன்னாடு மெந்த நகருள்ளுந் திரிவ மப்பா.

     (இ - ள்.) பின்னா வரு தென்னர் பிரான் பெரியோரை நோக்கி -
பின்னாக வரும் பாண்டியர் தலைவன் அப்பெரியோரைப் பார்த்து, நும் நாடு
ஊர் என் - நுமது நாடும் ஊரும் எவை, உமக்கு என் வரும் - உமக்கு
என்ன கைவரும், யாது வேண்டும் - உமக்கு வேண்டியது யாது, நும் நாமம்
ஏது - உமது பெயர் யாது, நுவல்மின் என - சொல்வீராக என்று வினவ,
ஐயர் - சித்த மூர்த்திகள், அப்பா எந்த நல்நாடும் எந்த நகருள்ளும் திரிவம்
- அப்பனே! நாம் எந்த நல்ல நாட்டிலும் எந்த நகரிலும் சஞ்சரிப்பேம்.

     நும் நாடு ஊர் என் எனக் கூட்டுக. என் - எவை. எந்நாடு நும்மூர்
என்பது பாடமாயின் நுமது ஊர் எந்த நாட்டிலுள்ளது என்று பொருள்படும்.
நாட்டுள்ளம் என விரிக்க. அப்பா என்பது பெரியோர் கூறும் மரபுச் சொல்.
இது முதல் ஐந்து செய்யுள் ஒரு தொடர். (6)


     (பா - ம்.) * நீட்டி. +எந்நாடு நும்மூர். எந்நாடு நுந்நாடு.