பண்ணுத லிசைவண் டார்க்கும் பசுந்தொடைச் செழியன் றானை
எண்ணுத லிலவாஞ் சென்னி யிரும்படைக் கடனே ராறாய்
நண்ணுத லெனப்போய்ப் பொன்னி நாடவன் றமர்கட் கெல்லாங்
கண்ணுத லருளா லங்கோர் கடலெனத் தோன்றிற் றம்மா.
|
(இ
- ள்.) பண்நுதல் இசை வண்டு ஆர்க்கும் - பண்ணோடமைந்த
இசையினையுடைய வண்டுகள் ஒலிக்கும், பசுந்தொடைச் செழியன் தானை -
பசிய மாலையையணிந்த பாண்டியன் சேனையானது, எண்ணுதல் இலவாம்
சொன்னி இரும்படைக் கடல் நேர் - எண்ணுதற்கு இயலாத சோழனது பெரிய
சேனைக்கடலுக்கு நேரே, ஆறாய் நண்ணுதல் எனப் போய் - ஓர் ஆறு
செல்லுதல் போலச் சென்று, பொன்னி நாடவன் தமர்கட்கு எல்லாம் - காவிரி
நாடனாகிய சோழனது போர் வீரர்கள் எல்லார்க்கும், கண்ணுதல் அருளால்
- சோமசுந்தரக்கடவுளின் திருவருளினாலே, ஓர் கடல் என அங்கு
தோன்றிற்று - ஒரு கடல்போலப் போர்க்களத்திலே தோன்றியது.
பண்ணுதலையுடைய
இசை யென்றுமாம். பசமை - வாடாமை. இலவாம்
படைகளாகிய கடல் என்க. ஆறு நண்ணுதல் எனப் பாடங் கொள்ளுதல்
நேரிது. தமர் - போர் வீரர். ஆறு போலச் சிறிதாய்ச் சென்று கடல் போலப்
பெரியதாய்த் தோன்றிற்று என்றார். அம்மா : வியப்பிடைச்சொல். (12)
கடலென வருமா வூர்ந்து கைதவன் சேனை முன்போய்
அடலணி மேருக் கோட்டி யாலவாய் நெடுநாண் பூட்டி
மடலவிழ் துழாய்க்கோ னாட்டி வாயெரி புரத்தி லூட்டி
மிடலணி கூடற் கோமான் வேடுரு வாகி நின்றான். |
(இ
- ள்.) அடல் அணி மேரு கோட்டி - வலிமை மிக்க மேரு
மலையாகிய வில்லை வளைத்து, ஆலவாய் நெடுநாண் பூட்டி - வாசுகி
யாகிய நீண்ட நாணைப் பூட்டி, மடல் அவிழ் துழாய்க்கோன் நாட்டி - இதழ்
விரிந்த துழாய் மாலை யணிந்த திருமாலாகிய வாளியை ஏறிட்டு, வாய் எரி
புரத்தில் ஊட்டி - நகையாலாகிய நெருப்பினை முப்புரங்களில் மூள்வித்து,
மிடல் அணி கூடல் கோமான் - வெற்றி பூண்ட கூடற் றலைவனாகிய
சோமசுந்தரக்கடவுள், வேடு உருவாகி - வேட்டுவ வடிவந் தாங்கி, கடல் என
வருமா ஊர்ந்து - (புடை பெயர்ந்த) கடல்போல விரைந்துவரும் குதிரையைச்
செலுத்தி, கைதவன் சேனை முன்போய் நின்றான் - பாண்டியனது சேனையின்
முன்னணியிற்சென்று நின்றான்.
கடல்
- திரையுமாம். ஊர்ந்த என்று பாடமிருப்பின், மாவூர்ந்த
கைதவனது கடலென வரும் சேனை முன்போய் என்றியைத் துரைத்தல்
பொருந்தும். ஆலவாய் - பாம்பு; ஆலத்தை வாயிலுடையது என அன்
மொழித்தொகை. கோனாகிய கோல் என இரட்டுற மொழிதலாகக் கொள்க.
அவ்வம்பின் வாயிலிருந்த அக்கினி யென்றுமாம். ஊட்டி அணிந்த கோமான்
என்க. (13)
|