II


உலவாக்கோட்டை யருளிய படலம்307



     (இ - ள்.) இந்நீரவாய வளம் குன்றினும் - இத்தன்மையவாகிய
செல்வங்கள் குறைந்தாலும், இன்மை கூறாத் தன் நீர்மை குன்றான் எனும்
தன்மை - வறுமையைக் கூறாமையாகிய தன் இனிய பண்பினின்றும் குன்ற
மாட்டான் (இவ்வடியார்க்கு நல்லான்) என்னுந் தன்மையை, பிறர்க்குத்
தேற்ற - அஃதுணராத மற்றையோருக்குத் தெளிவிக்க, நல் நீர் வயலின்
விளைவு அஃகி நலிவு செய்ய - நல்ல நீர்வள மிக்க வயல்களில் விளைவு
குறைந்து வருத்துமாறு, மின் நீர வேணி - மின்போலும் ஒளி வீசுந்
தன்மையையுடைய சடையையுடைய, மது ரேசர் விலக்கினார் - சோமசுந்தரக்
கடவுள் அவ்விளைவை விலக்கியருளினார்.

     இன்மை கூறாமை - தன்பால் வந்து இரந்தவர்க்கு 'என்னிடம்
பொருளில்லை' யென்று கூறாமை; ஈதல்.

"இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்"

என்பது காண்க. அன்பன், இயல்பு ஆண்டவனுக்குத் தெரியுமாயினும்,
அவ்வியற்கையை ஏனையோர்க்கும் தெரிவித்து உய்வித்தற் பொருட்டு
அங்ஙனஞ் செய்தனர் என்றார். மின் ஈர வேணி என்றுரைத்தலும்
பொருந்தும். மதுசேர் தேற்ற நலிவு செய்யும்படி விலக்கினார் என்க.

"செல்வ மேவிய நாளி லிச்செயல் செய்வ தன்றியு மெய்யினால்
அல்ல னல்குர வான போதினும் வல்ல ரென்றறி விக்கவே
மல்ல னீடிய செல்வ மெல்ல மறைந்து நாடொறு மாறிவந்
தொல்லை யில்வறு மைப்ப தம்புக வுன்னி னார்தில்லை மன்னினார்"

என்னுந் திருத்தொண்டர் புராணச் செய்யுள் இங்கு நினைக்கற்பாலது.
(6)

குன்றா விருத்திக் கடன்கொண்டுகொண் டன்பர் பூசை
நன்றா நடாத்தத் தொடுத்தான்கடன் றானுங் கிட்டா
தொன்றாலுங் கொண்ட விரதத்துக் குறுதி யின்றி
நின்றா னுடம்பை யொறுக்கின்ற நியமம் பூண்டான்.

     (இ - ள்.) குன்றா விருத்திக் கடன் கொண்டு கொண்டு - குறையாத
வட்டிக் கடனை வாங்கி வாங்கி, அன்பர் பூசை நன்றா நடாத்தத்
தொடுத்தான் - அடியார் பூசையைச் செவ்வனே நடத்தத் தொடங்கினான்;
கடன் தானும் கிட்டாது - பின் அக்கடனும் கிடைக்காமல், ஒன்றாலும்
கொண்ட விரதத்துக்கு உறுதி இன்றி நின்றான் - வேறொன்றினாலுந் தான்
மேற்கொண்ட விரதத்தை முடிப்பதற்கு வலியில்லாமல் நின்ற அடியார்க்கு
நல்லான், உடம்பை ஒறுக்கின்ற நியமம் பூண்டான் - உடலை
(உணவின்றியிருத்தலால்) வருத்தும் கடப்பாட்டினை மேற்கொண்டான்.

     விருத்தி - வட்டி. தொடுத்தான் - தொடங்கினான். நின்றான் :
பெயர். (7)