II


310திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



விடனல்கு சூலப் படையாய் கடன் வேறு காணேன்
கடனல்க வல்லார் தமைக்காட்டுதி காட்டி லாயேல்
மடனல்கு மிந்த வுடம்பின்சுமை மாற்று வேனென்
றுடனல்கு கற்புக் குரியாளொடும் வேண்டு மெல்லை.

     (இ - ள்.) விடன் நல்கு சூலப் படையாய் - நஞ்சினை உமிழுஞ் சூலப்
படையையுடைய பெருமானே, கடன் வேறு காணேன் - கடன் கொடுப்பார்
வேறு ஒருவரையும் யான் அறிந்திலேன்; கடன் நல்க வல்லார் தம்மைக்
காட்டுதி - (ஆதலின்) கடன் கொடுக்க வல்லவரை நீ காட்டக் கடவை;
காட்டிலாயேல் காட்டாவிடிலோ, மடன் நல்கும் இந்த உடம்பின் சுமை
மாற்றுவேன் என்று - அறியாமை பொருந்திய இந்த உடற்பொறையை மாற்றி
விடுவேனென்று கூறி, உடன் அல்கு கற்புக்கு உரியாளொடும் வேண்டும்
எல்லை - தன்னுடனுறையும் கற்புக்குரிய மனைவியோடும் நின்று
குறையிரக்கும் பொழுது.

     விடன் அல்கு, மடன் அல்கு எனப் பிரித்தலுமாம். அல்கல் -
பொருந்தல். கடன் வேறு காணேன் என்பதற்கு வேறு செய்யத் தக்கது
அறியேன் என்னலுமாம். உடம்பின் : இன் சாரியை அல்வழிக் கண்
வந்தது. (12)

பஞ்சாதி வேதப் பொருள்சொன்ன பரமன் வாக்கொன்
றஞ்சாதி வேளாண் டலைவளவு னகத்தி லின்றோர்
செஞ்சாதி யாய* செழுவாலரிக் கோட்டை யுய்த்தேம்
எஞ்சா திருக்கு மெடுக்குந்தொறு மென்று மாதோ.

     (இ - ள்.) பஞ்சாதி வேதப் பொருள் சொன்ன பரமன் வாக்கு ஒன்று
- பஞ்சாதி என்னும் உறுப்பினையுடைய வேதத்திற்குப் பொருளருளிச் செய்த
இறைவன் திருவாக்கு ஒன்று, வேளாண் தலைவா அஞ்சாதி - வேளாண்குடித்
தலைவனே! நீ அஞ்சாதே; உன் அகத்தில் இன்று - உன் வீட்டில் இன்று,
ஓர் செஞ்சாதி ஆய செழுவால் அரிக் கோட்டை உய்த்தேம் - ஒரு
செந்நெல்லாலாய அழகிய வெள்ளிய அரிசிக் கோட்டையைச் செலுத்தினோம்;
என்றும் எடுக்குந் தோறும் எஞ்சாது இருக்கும் - (அது) எஞ்ஞான்றும் எடுக்க
எடுக்கக் குறையாமலிருக்கும்.

     பஞ்சாதி - சந்தை கூட்டி ஓதுவோர் நிறுத்துதற் பொருட்டு வேதத்தில்
வகுக்கப்பட்ட ஐம்பது பதங்கொண்ட ஒரு முடிவு. அஞ்சாதி : எதிர்மறை
யேவல்; த் : எழுத்துப்பேறு. அரி - அரிசி. மாது, ஓ : அசைகள். (13)

நீநாளும் பூசித் ததில்வேண்டிய கொண்டு நித்தம்
ஆனாத வன்பர்க் கமுதூட்டி யெவர்க்கு மன்ன
தானாதி நானா தருமங்களுஞ் செய்தி வீடு
மேனா ளளிக்கின் றனமென்று விசும்பிற் கூற.

     (பா - ம்.) * செஞ்சாலியாய.