II


மாமனாகவந்து வழக்குரைத்த படலம்315



     கன்னி - அழிவின்மை. தம்மின் எனற்பாலது தன்னின் என எதுகை
நோக்கி வந்தது. அன்னனாய் என வினையெச்சமாக்கலுமாம். மடவரல் -
மடப்பத்தையுடையாள். திருவின், சாரியை நிற்க உருபு தொக்கது. (2)

எனவிவர் தமக்கு மைந்தற் பேறின்றி யிரங்கு நாளிற்
றனபதி மருகன் றன்னைத் தகவுசான் மகவாக் கொண்டு
மனமகிழ் சிறப்பா னல்க மனைவியுந் தொழுது வாங்கிப்
புனைவன புனைந்து போற்றிப் பொலிவுற வளர்த்துக்
                                 கொண்டாள்.

     (இ - ள்.) என இவர் தமக்கு - என்று கூறப்பட்ட இவர்கட்கு,
மைந்தன் பேறு இன்றி இரங்கு நாளில் - புதல்வற்பேறு இல்லாமல் வருந்தும்
பொழுது, தனபதி மருகன் தன்னை - தனபதி என்பவன் தன் மருமகனை,
தகவுசால் மகவாக் கொண்டு - தகுதியமைந்த புதல்வனாக ஏற்றுக் கொண்டு,
மனமகிழ் சிறப்பால் நல்க - மனமகிழ்ந்து சிறப்போடு கொடுக்க, மனைவியும்
தொழுது வாங்கி - மனைவியாகிய சுசீலையும் வணங்கிக் கையில் வாங்கி,
புனைவன புனைந்து போற்றி - அணியத்தக்க அணிகளை அணிவித்துப்
பேணி, பொலிவுஉற வளர்த்துக் கொண்டாள் - பொலிவு மிக வளர்த்தனள்.

     மருகன் - தங்கை மகன். மகனாக் கொள்ளுதல் புதல்வனாக முறைப்படி
ஏற்றுக் கொள்ளுதல். (3)

தனபதி மகப்பே றற்றா னாயினுந் தணவாக் காதன்
மனைவிமேல் வைத்த வாசை மயக்கினால் வருந்தி யீன்ற
தனையனை மகவாத் தந்த தங்கைமேற் றீராப் பூசல்
வினைவிளைத் தொழுக வோர்நா ளிளையளும் வெகுண்டு
                                      சொல்வாள்.

     (இ - ள்.) தனபதி - தனபதி என்பான், மகப்பேறு அற்றான் ஆயினும்
- பிள்ளைப் பேறு இல்லாதவனாயினும், தணவாக் காதல் மனைவி மேல்
வைத்த - நீங்காத காதலையுடைய மனைவியினிடத்து வைத்த, ஆசை
மயக்கினால் - ஆசையாற் போந்த மயக்கத்தினால், வருந்தி ஈன்ற தனையனை
- தான் வருந்திப் பெற்ற புதல்வனை, மகவாத் தந்த தங்கை மேல் -
பிள்ளையாகக் கொடுத்த தங்கையின் மேல், தீராப் பூசல் வினைவிளைத்து
ஒழுக - நீங்காத போர்த் தொழிலைச் செய்து வர, ஓர் நாள் இளையளும்
வெகுண்டு சொல்வாள் - ஒரு நாள் தங்கையும் சினந்து கூறுவாளாயினள்.

     மனைவி வயிற்று மகப் பேறின்றித் தங்கை மகனை மகவாக்
கொண்டவன் அவளுடன் பூசல் விளைத்தல் சிறிதும் தகாதென்பார் 'மகப்
பேறற்றானாயினும்...............பூசல் வினைவிளைத்து' என்றார். மயக்கினால் பூசல்
வினைவிளைத்து என இயைக்க. இதனால் அவன் மனைவி தனது நாத் தூண்
நங்கையொடு மனம் பொருந்தாதிருந்தமை பெறப்படும். (4)