மடங்கி, அவ்விருவகை
இந்திரியங்களும் தொழிற்பாடின்றி ஆண்டு
நின்றொழியும் அவத்தையின், ஏனை அந்தக்கரண முதலியன தொழிற்படினும்
புறப்பொருள் விடயமாகாமையின் அகத்தே சூக்கும தேகத்தோடு நின்று
ஆண்டைக் குரிய இருவினைப் பயன்களை நுகர்ந்து நிற்கும் அவத்தை
சொப்பனம்" என்னும் சிவஞான போதமா பாடியத்தாலுணர்க.
(11)
புலர்ந்தபின்
றாயத் தோரைப் புரவல னாணை யாற்றால்
வலந்தரு மன்றத் தேற்றி மறித்தனை யிருத்தி யாம்போந்
தலந்தரு மறிவான் மூத்தோ ரனைவரு மிசைய *வந்தச்
சலந்தரு வழக்குத் தீர்த்துத் தருகுவம் போதி யென்றார். |
(இ
- ள்.) புலர்ந்தபின் - விடிந்த பின்னர், தாயத்தோரை -
பங்காளிகளை, புரவலன் ஆணை ஆற்றால் - அரசன் ஆணை வழியால்,
மறித்தனை - மறித்து, வலம்தரு மன்றத்து ஏற்றி இருத்தி - வெற்றியைத்
தரும் அவையின்கண் ஏற்றி இருப்பாயாக; யாம் போந்து - யாம் வந்து,
அலம் தரும் அறிவால் மூத்தோர் அனைவரும் இசைய - அமைந்த
உணர்வினால் முதியோரனைவரும் உடன்பட, அந்தச் சலம் தரு வழக்குத்
தீர்த்துத் தருகுவம் - அந்தப் பொய்ய வழக்கினை ஒழித்து உன் பொருளைக்
கொடுப்போம்; போதி என்றார் - நீ போகக் கடவை என்றருளிச் செய்தார்.
அரசன்
ஆணை கூறியழைப்பின் மீறிச் செல்லாராகையால் 'புரவலன்
ஆணையாற்றால் மறித்தனை மன்றத் தேற்றி' என்றார். வலந்தரு மன்றம் -
உண்மையுணர்த்தி வெற்றியைத் தரும் மன்றம்; அறங்கூறவையம். மறித்தனை :
முற்றெச்சம். அலம் - அமைவு. அனைவருக்கும் பொருந்த என்றுமாம். சலம்
- பொய். இருத்தி, போதி என்பவற்றில் த் : எழுத்துப் பேறு. (12)
வேரியங் குவளை யுண்கண் விழித்தனள் வியந்து கெட்டேன்
ஆருமில் லார்க்குத் தெய்வந் துணையென்ப தறிந்தே னென்னாக்
காரிருங் கயலுண் கண்ணாள் கணவனைத் தொழுது வாழ்த்திச்
சீரிளங் குமர னோடுந் தெரிவைதன் மனையிற் சென்றாள். |
(இ
- ள்.) வேரி அம் குவளை உண்கண் விழித்தனள் - தேனையுடைய
அழகிய குவளை மலரை வென்ற கண்கள் விழித்து, வியந்து - அதிசயித்து,
கெட்டேன் - ஆ கெட்டேன்!, ஆரும் இல்லார்க்குத் தெய்வம் துணை என்பது
அறிந்தேன் என்னா - அகதிக்குத் தெய்வந்துணை என்னும் பழமொழியை
அறிந்தேனென்று கூறி, கார் இருங்கயல் உண்கண்ணாள் கணவனை - கரிய
பெரிய மையுண்ட கயல்போலுங் கண்களையுடைய அம்மையின் நாயகனாகிய
சோமசுந்தரக் கடவுளை, தொழுது வாழ்த்தி - வணங்கித் துதித்து, சீர் இளங்
குமரனோடும் - சீரிய இளமை பொருந்திய புதல்வனோடும், தெரிவை தன்
மனையில் சென்றாள் - அம்மாது தனது இல்லின்கட் சென்றனள்.
(பா
- ம்.) * அனைவரு மறிய.
|