II


மாமனாகவந்து வழக்குரைத்த படலம்329



தந்தைதாய் மாமன் மாமி தாயத்தா ரவரை* யீன்றார்
மைந்தர்க ளுடன்பி றந்தார் மனைவியர் கிளைஞர் மற்றும்
அந்தமில் குணங்கள் செய்கை யாதிய வடையா ளங்கள்
முந்தையின் வழுவா வண்ண முறையினான் மொழிந்தான்                                     முன்னோன்.

     (இ - ள்.) தந்தை தாய் மாமன் மாமி - அவரவருடைய தந்தையும்
தாயும் மாமனும் மாமியும், தாயத்தார் - ஞாதிகளும். அவரை ஈன்றோர் -
அவர்களைப் பெற்றோரும், மைந்தர்கள் உடன் பிறந்தார் மனைவியர்
கிளைஞர் - புதல்வர்களும் உடன் பிறந்தாரும் மனைவியரும்
சுற்றத்தாருமாகிய இவர்களையும், மற்றும் அந்தம் இல் குணங்கள் செய்கை
ஆதிய அடையாளங்கள் - மற்றும் அவர்களின் அளவிறந்த குணங்களும்
செய்தொழிலும் முதலிய அடையாளங்களையும், முந்தையின் வழுவாவண்ணம்
முறையினால் முன்னோன் மொழிந்தான் - முன்னுள்ள படியே சிறிதுந் தவறாத
வண்ணம் முறைப்படி முதல்வனாகிய வணிகன் மொழிந்தனன்.

     தந்தை முதல் கிளைஞர் ஈறாய அனைவரையும், அவர்கள் குணம்
செயல் முதலிய அடையாளங்களையும் கூறினன் என்க. (32)

அனையது கேட்ட வான்றோ ரனைவரு நோக்கி யந்தத்
தனபதி வணிகர் தாமே யிவரெனச் சாற்ற லோடும்
மனவலித் தாயத் தார்தம் வழக்கிழுக் கடைந்த தீது
நனைவழி வேம்பன் றேரிற் றண்டிக்கு நம்மை யென்னா.

     (இ - ள்.) அனையது கேட்ட ஆன்றோர் அனைவரும் நோக்கி -
அதனைக் கேட்ட பெரியோரனைவரும் (ஞாதிகளைப்) பார்த்து, இவர் அந்தத்
தனபதி வணிகரே எனச் சாற்றலோடும் - இவர் அந்தத் தனபதி வணிகரே
யாவர் என்று கூறியவளவில், மனவலித் தாயத்தார்தம் வழக்கு இழுக்கு
அடைந்தது - மன வன்மையுடைய ஞாதியரின் வழக்குத் தோல்வியுற்றது; ஈது
-இதனை, நனைவழி வேம்பன் தேரில் - தேன் வழியும் வேப்பமலர்
மாலையையுடைய பாண்டியன் அறிந்தானாயின், நம்மைத் தண்டிக்கும் என்னா
- நம்மைத் தண்டிப்பான் என்று கருதி.

     தாம் : அசை; ஏகாரம் தேற்றம். (33)

இல்லினுக் கேகி மீள்வன் யானென்றுங் குளத்திற் கேகி
ஒல்லையில் வருவே னென்று மொவ்வொரு வார்த்தை யிட்டு
வல்லெழு வனைய தோளா ரனைவரும் வன்கா றள்ளச்
செல்லெழு முகில்போற் கூட்டஞ் சிதைந்தன ரொளித்துப்                                        போனார்.

     (இ - ள்.) யான் இல்லினுக்கு ஏகி மீள்வன் என்றும் - யான்
வீட்டிற்குச் சென்று வருவேன் என்றும், குளத்திற்கு ஏகி ஒல்லையில்
வருவேன் என்றும் - பொய்கைக்குப் போய் விரைவில் வருவேனென்றும்,


     (பா - ம்.) * தாயத்தா ரிவரை.