II


342திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     சேனையின் பரப்பாலும் முழக்கத்தாலும் எழுச்சியாலும் கடல்புடை
பெயர்ந்து வந்தாற்போல என்க. முடியோன் தானை போர்ப்ப அதனுடன்
பேரியம் ஆர்ப்ப ஆர்கலிவந்தெனப் படர்ந்த வெல்லை என வினை
முடிக்க. தாமம் - ஒளியுமாம். (17)

மிடைந்தேறு நேரிப் பொருபன்படை வேலை மேற்சென்
றடைந்தேறி மீனக் கொடியானம ராட வாழி
கடைந்தேறு வெற்பிற் கலங்கிற்றெனக் கிள்ளி சேனை
உடைந்தேக வெந்நிட் டுடைந்தோடின னுள்ளம் வெள்கா.

     (இ - ள்.) மிடைந்து ஏறும் நேரிப்பொருப்பன்படை வேலை மேல் -
நெருங்கி முன்னேறிய நேரி மலையையுடைய சோழனது சேனைக் கடலின்
மேல், ஏறிச் சென்று அடைந்து - எதிர்த்துச் சென்று பொருந்தி,
மீனக்கொடியான் அமர் ஆட - மீனக்கொடியுயர்த்திய பாண்டியன் போர்
செய்ய, ஆழி - கடலானது, கடைந்து ஏறு வெற்பின் - கடைந்து எழுந்த
மந்தர மலையினால், கலங்கிற்று என - கலங்கினாற்போல, கிள்ளி சேனை
உடைந்து ஏக - சோழன் படை தோற்று ஓட, உடைந்து வெந்இட்டு உள்ளம்
வெள்கா ஓடினன் - (சோழனும்) தோற்றுப் புறங்காட்டி மனம்வெள்கி
ஓடினான்.

     பாற்கடலை மந்தர வெற்புக் கலக்கினாற் போலச் சோழனது
சேனையைப் பாண்டியன் கலக்கினான் என்க. (18)

சுறவக் கொடியண்ண றுரந்துபின் பற்றிச் செல்வோன்
புறவக் கடிமுல் லையுந்தாமரைப் போது மேந்தி
நறவக் கழிநெய்தலங் கானலின் ஞாங்கர் மொய்த்த
இறவப் புலவு கழுவீர்ந்துறைப் பொன்னி சேர்ந்தான்.

     (இ - ள்.) பின்பற்றி துரந்து செல்வோன் - (அங்ஙனம் ஓடிய
சோழனைப்) பின் பற்றித் துரந்து செல்வோனாகிய, சுறவக்கொடி அண்ணல்
- மீனக் கொடியுயர்த்திய வரகுண பாண்டியன், புறவக்கடி முல்லையும் -
முல்லை நிலத்து மணமிக்க முல்லை மலரையும், தாமரைப் போதும் ஏந்தி -
தாமரை மலரையும் ஏந்தி, நறவம் கழி செய்தல் கானலின் ஞாங்கர் - தேன்
சிந்தும் கழிசூழ்ந்த நெய்தல் நிலத்துச் சோலையின் மருங்கில், மொய்த்த
இறவு புலவுகழுவு - நெருங்கிய இறால் மீனின் புலால் நாற்றத்தைப் போக்கும்.
ஈர்துறைப் பொன்னி சேர்ந்தான் - குளிர்ந்த நீர்த் துறையையுடைய
காவிரியையடைந்தான்.

     பாண்டியன் கொடியை மீன் என்னும் பொதுமையால் கயல் எனவும்
சுறா எனவும் கூறுவர். இறவு - இறான் மீன். முல்லை நிலத்துப் பூவையும்
மருத நிலத்துப் பூவையும் கொண்டு சென்று நெய்தனிலத்துப் புலாலை
யொழிக்கும் எனக் காவிரியின் சிறப்புக் கூறினார். செல்வோனாகிய அண்ணல்
பொன்னி சேர்ந்தான் என்க. (19)