கோடி மாமதிக் கடவுளர் குரூஉச்சுடர் பரப்பி
நீடி யோரிடத் துதித்தென மின்மினி நிகர்த்து
வாடி வானிரு சுடரொளி மழுங்கவா னிழிந்து
தேடி னார்க்கரி யானுறை சிவபுரந் தோன்ற.
|
(இ
- ள்.) தேடினார்க்கு அரியான் உறை சிவபுரம் - தேடிய
திருமாலுக்கும் பிரமனுக்கும் அரிய இறைவன் தங்கியருளிய சிவலோகமானது,
கோடிமா மதிக்கடவுளர் - நிறைந்த கோடி திங்கட் புத்தேளிர், குரூஉச்சுடர்
பரப்பி - நிறம் பொருந்திய ஒளியினைப் பரப்பி, நீடி ஓர் இடத்து உதித்தென
-குறைவின்றி ஒரேயிடத்தில் உதித்தாற்போல, வான் இரு சுடர் - வானின்கண்
உள்ள பரிதியும் மதியுமாகிய இரண்டு சுடர்களும், மின் மினி நிகர்த்து வாடி
ஒளி மழுங்க - மின்மினிப் பூச்சியை ஒத்து வாடி ஒளி மழுங்குமாறு, வான்
இழிந்து தோன்ற - விண்ணினின்றும் இறங்கித் தோன்றா நிற்க.
கோடி
- எண்ணிறந்த என்னும் பொருட்டு. ஒளியுடன் தட்பமும்
உடைமையால் மதிக் கடவுளரைக் கூறினார். உதித்தென : விகாரம்.
தேடினார்க்கு என்பதற்குத் தற்போதத்தால் ஆராயலுற்றார்க்கு எனப்
பொதுவாக உரைத்தலுமாம். சிவபுரம் இருசுடரொளி மழுங்க வாளிழந்து
தோன்ற என வினை முடிவு கொள்க. (30)
ஆண்ட நாயக னந்தியை யழைத்தெமக் கன்பு
மாண்ட காதலான் வரகுண வழுதிநம் முலகங்
காண்டல் வேண்டினான் காட்டெனக் கருணையா லேவல்
பூண்ட வேத்திரப் படையினான் றொழுதனன் போனான். |
(இ
- ள்.) ஆண்ட நாயகன் - எம்மை ஆண்டருளிய சோம சுந்தரக்
கடவுள், நந்தியை அழைத்து - நந்திப்புத்தேளை அழைத்து, எமக்கு அன்பு
மாண்ட காதலான் வரகுணவழுதி - எமக்கு அன்பு சிறந்த விருப்பத்தை
யுடையனாகிய வரகுண பாண்டியன், நம் உலகம் காண்டல் வேண்டினான்
காட்டு என - நமது உலகத்தைக் காண விரும்பினான் ஆகலின்
காட்டுவாயாக என்று கூறியருள, கருணையால் - அவன் திருவருளினால்,
ஏவல் பூண்ட வேத்திரப் படையினான் - அவ்வேலை மேற்கொண்ட பிரம்புப்
படையையுடைய திருநந்திதேவன், தொழுதனன் போனான் - வணங்கிச்
சென்றான்.
ஆண்ட
நாயகன் - தம்மை ஆண்ட நாயகன் என்றும், உயிர்களை
ஆண்ட நாயகன் என்றும் உரைத்தலுமாம். காதல் - அன்பின் முதிர்ச்சி,
ஏவல் பூண்ட என்பதற்குப் பணி செய்தலை மேற்கொண்ட எனப் பொதுவின்
உரைத்தலுமாம். கருணையான் என்னும் பாடத்திற்கு இறைவன் என்பது
பொருள். தொழுதனன் - முற்றெச்சம். (31)
வருதி யாலெனப் பணிந்தெழு வரகுணற் கொடுபோய்க்
கருதி யாயிரம் பெயருடைக் கடவுணான் முகத்தோன்
சுருதி யாதியீ றளப்பருஞ் சொயம்பிர காசப்
பரிதி யாள்சிவ புரமிது பாரெனப் பணித்தான். |
|