II


350திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) வருதி என - (அங்ஙனஞ் சென்ற நந்திதேவன்) வருவாய்
என்றருள, பணிந்து எழு வரகுணன் கொடு போய் - வணங்கி எழுந்த
வரகுண பாண்டியனைக் கொண்டு சென்று, ஆயிரம் பெயர் உடைக் கடவுள்
நான்முகத்தோன் - ஆயிரம் பெயருடைய திருமாலும் பிரமனும், சுருதி ஆதி
கருதி - வேத முதலிய அளவைகளால் ஆராய்ந்து, ஈறு அளப்பு அரு -
முடிவு காண்பரிய, சொயம்பிரகாசம் பரிதி ஆள் - இயற்கையாகிய
பேரொளியினையுடைய ஞான சூரியனாகிய சோம சுந்தரக் கடவுள்
ஆண்டருளுகின்ற, சிவபுரம் இது - சிவலோகம் இது; பார் எனப் பணித்தான்
- இதனைக் காண்பாயாக எனப் பணித்தருளினான்.

     வருதியென்று கூறி அங்ஙனம் கூறியவளவிற் பணிந்தெழுந்த
வருகுணனைக் கொண்டு போய் என விரித்துரைக்க. கடவுளாகிய பரிதி
எனலுமாம்; இதற்கு, கருதிப் பார் எனப் பணித்தான் என்றியைத்துரைக்க.
நான்முகத்தோனும் சுருதி முதலியவும் ஈறு அளப்பரும் என்றும்,
நான்முகத்தோனும் சுருதியும் முதலு முடிவும் அளத்தற்கரிய என்றும்
உரைத்தலுமாம்;

"மறையினா லயனான் மாலான் மனத்தினால் வாக்கால் மற்றும்
குறைவிலா வளவி னாலுங் கூறொணா தாகி நின்ற
இறைவனார்"

என்று சிவஞான சித்தியார் கூறுதல் அறியற் பாலது, ஞாயிறு முதலிய
ஒளிகட்கெல்லாம் ஒளி கொடுத்து இயல்பின் விளங்கும் பேரொளியாகலின்
'சொயம்பிரகாசப் பரிதி' என்றார். ஆல் : அசை. (32)

கருப்பு ரங்கமழ்ந் துளர்பசுங் கால்களா லுதையுண்
டருப்பி னஞ்சிதைந் தாயிரப் பத்தியோ சனைபோய்
மருக்க மழ்ந்துநூ றாயிரம் வாலிதழ்க் கமலம்
இருக்கு மோடைகள் புடைதொறுந் தழுவிய யாறும்.

     (இ - ள்.) கருப்புரம் கமழ்ந்து - கருப்புர மணம் வீசி, உளர் பசுங்
கால்களால் - அசைகின்ற தென்றற் காற்றுகளால், உதையுண்டு -
மொத்துண்டு, அருப்பு இனம் சிதைந்து - அரும்புக் கூட்டங்கள் முறுக்
கவிழ்ந்து, ஆயிரப் பத்து யோசனை போய் மருக்கமழ்ந்து - பதினாயிரம்
யோசனை தூரஞ் சென்று மணம் வீசி, நூறாயிரம் வால் இதழ்க் கமலம்
இருக்கும் ஓடைகள் - நூறாயிரம் இதழ்களையுடைய வெண்டாமரை மலர்கள்
இருக்கின்ற ஓடைகள், புடை தொறும் தழுவிய யாறும் - பக்கந்தோறும்
பொருந்திய ஆறுகளும்.

     பசுங்கால் - இளங்காற்று. கால் என்றதற்கேற்ப உதையுண்டு என
நயம்படக் கூறினார். வால் - தூய்மையுமாம். (33)