II


358திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



சிவபெருமானுக்கு, ஆலயம் கண்டு தாபித்தோர் - திருக்கோயில் எடுத்துப்
பிரதிட்டை செய்தவருமாய், ஊனம் சேர் பிறப்பு அறுத்து வாழ் உத்தமர்
இவர் காண் - குற்றம் பொருந்திய பிறப்பினைப் போக்கி வாழும் உத்தமர்
இவர்.

     சிவஞான தானமாவது அபர ஞானமாகிய மெய்ந் நூல்களை ஈதலும்,
அவற்றின் பொருளைப் பக்குவமுடையார்க்கு அறிவுறுத்தலும் முதலியன
செய்தல். தருப்பணம் - சிவனைக் கருதி மந்திர நீர் இறைத்தல். (46)

சிவனை யர்ச்சனை செய்பவர்க் கிசைவன செய்தோர்
அவனெ னக்குறித் தடியரைப் பூசைசெய் தாறு
சுவையு வின்னமு தருதினோர் தொண்டர்தம் பணியே
தவமெ னப்புரிந் துயர்ச்சியைச் சார்ந்தவ ரிவர்காண்.

     (இ - ள்.) சிவனை அர்ச்சனை செய்பவர்க்கு - சிவபெருமானைப்
பூசிப்பவருக்கு, இசைவன செய்வோர் - பொருந்தும் காரியங்களைச்
செய்தவரும், அடியரை அவன் எனக் குறித்து - அடியார்களை அச்சிவ
பெருமானே எனக் கருதி. பூசை செய்து - பூசித்து, ஆறு சுவைய இன்
அமுது அருத்தினோர் - அறுவகைச் சுவையமைந்த இனிய உணவினை
உண்பித்தவருமாய், தொண்டர்தம் பணியே தவம் எனப் புரிந்து - அடியார்
பணியைச் செய்தலே தவமென்று கருதிச் செய்து, உயர்ச்சியைச் சார்ந்தவர்
இவர்காண் - மேன்மையை அடைந்தவர் இவர்.

     இசைவன - பொருந்திய உபகரணங்களையளித்தலும் பணி செய்தலுமாம்.
(47)

ஆதி சுந்தரக் கடவுளுக் காலயம் பிறவும்
நீதி யாலருச் சனைபிற பணிகளு நிரப்பிப்
பூதி சாதன வழிநிலம் புரந்திவ ணடைந்த
கோதி லாதநின் குடிவழிக் கொற்றவ ரிவர்காண்.

     (இ - ள்.) ஆதி சுந்தரக் கடவுளுக்கு - முதல்வராகிய சோம சுந்தரக்
கடவுளுக்கு, ஆலயம் பிறவும் - திருக்கோயிலும் மற்றுள்ளனவும், நீதியால்
அருச்சனை பிற பணிகளும் நிரப்பி - விதிப்படி அருச்சனையும் பிற
திருப்பணிகளும் குறைவறச் செய்து, பூதி சாதன வழி - திருநீறு முதலிய
சிவசாதன நெறியினால், நிலம் புரந்து - புவியினைக் காத்து, இவண் அடைந்த
- இங்கு வந்த கோது இலாத - குற்றமில்லாத, நின் குடிவழிக் கொற்றவர்
இவர் காண் - நின் மரபிற்றோன்றிய மன்னவர் இவர்.

     ஆலயமும் பிறவும் அமைத்து என ஒரு சொல் வருவித் துரைத்தலுமாம்.
(48)