II


வரகுணனுக்குச் சிவலோகங்காட்டிய படலம்359



என்று வேத்திரங் கொடுகுறித் தெம்மிறை நந்தி
கொன்றை வேணியா னடியர்தங் குழாத்தினைத் தேற்றி
நின்று வீழ்ந்துவீழ்ந் தஞ்சலி முகிழ்த்திட நெறியே
சென்று வானவர் நாயகன் றிருமுன்பு விடுத்தான்.

     (இ - ள்.) என்று - என்று கூறி, வேத்திரம் கொடு குறித்து -
பிரம்பினாற் சுட்டிக் காட்டி, எம் இறை நந்தி - எம் தலைவனாகிய திரு
நந்தி தேவன், கொன்றை வேணியன் - கொன்றை மாலையையணிந்த
முடியையுடைய இறைவனது, அடியர்தம் குழாத்தினைத் தேற்றி - அடியார்
கூட்டத்தினைத் தெரிவித்து, நெறியே - முறைப்படியே, நின்று வீழ்ந்து
வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்திட - (பாண்டியன்) ஒவ்வோரிடத்தினும் நின்று
பல முறை விழுந்து வணங்கிக் கைகூப்ப, சென்று - (அவனைக் கொண்டு)
சென்று, வானவர் நாயகன் திருமுன்பு விடுத்தான் - தேவர்கள்
தலைவனாகிய சிவபெருமான் திருமுன் விடுத்தனன்.

     பிரமன் முதலாகப் பாண்டியர் ஈறாக இதுகாறும் கூறப் பெற்றோரை
அடியர் தங்குழாம் என்றார். நந்தி குறித்துத் தேற்றிச் சென்று விடுத்தான்
என வினைமுடிக்க. (49)

மறைக ளாகமம் வடிவெடுத் திருபுடை வாழ்த்த
நறைகொள் யாழ்தழீஇத் தும்புரு நாரதர் பாட
அறைகொள் வண்டிமிர் கொம்பரி னரம்பைய ராடக்
குறைகொள் வானவர் பதங்கிடை யாதிரை கொள்ள.

     (இ - ள்.) மறைகள் ஆகமம் வடிவு எடுத்து - வேதங்களும்
ஆகமங்களும் உருவங்கொண்டு, இருபுடை வாழ்த்த - இரண்டு
பக்கங்களிலும் நின்று வாழ்த்தவும், நறைகொள் யாழ்தழீஇ - இனிய
இசையமைந்த யாழினைத் தழுவி, தும்புரு நாரதர் பாட - தும்புருவும்
நாரதரும்
நின்று பாடவும், அறைகொள் வண்டு இமிர் கொம்பரின் -
இசை பாடும் வண்டுகள் ஒலிக்கும் பூங்கொம்பு போல; அரம்பையர்
ஆட - தேவ மகளிர் ஆடவும், குறை கொள் வானவர் பதம் கிடையாது
இறை கொள்ள - குறையிரக்குந் தேவர்கள் காண்டற்குரிய செவ்வி பெறாது
காத்திருக்கவும்.

     நறை - தேன்; தேன் போலும் இன்னிசைக் காயிற்று. தழீஇ :
சொல்லிசை யளபெடை. அறை - பாடுதல் : முதனிலைத் தொழிற் பெயர்.
இறை கொள்ள - தங்க; ஒரு சொல். (50)

மதங்க விழ்க்குமால் வரைமுக மைந்தனுஞ் சூரன்
கதங்க விழ்த்தவேற் கந்தனுங் கருதலன் வேள்வி
விதங்க விழ்த்தவாள் வீரனும் வெயின்முடித் தார்தேன்
பதங்க விழ்ப்பவீழ்ந் தேயின பணிவழி நிற்ப.