II


362திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) யாவர்க்கும் வரன் முறை - அனைவருக்கும் அவரவர்
தகுதிக்கேற்ப, தவாதன வரம் வழங்கி - கெடாதனவாகிய வரங்களை
அருளிச் செய்து, முருந்து அவாம் நகை மலைக்கொடி - மயிலிறகின்
அடியும் விரும்பும் பல் வரிசைகளையுடைய மலை வல்லியாகிய
உமையம்மையார், முகிழ் நகை அரும்ப - புன்னகை செய்ய, திருந்த
ஆயிரம் கதிர் விடு சிங்க மெல் அணைமேல் - திருத்தமாக
அளவிறந்த ஒளி விடுகின்ற மெல்லிய சிம்மாதனத்தின்மேல், இருந்த
நாயகன் இருக்கை கண்டு - வீற்றிருந்த இறைவனுடைய இருப்பினைத்
தரிசித்து, இறைவன் இறைஞ்சினான் - வரகுண வேந்தன் வணங்கினான்.

     முருந்த வாணகை என்னும் பாடத்திற்கு முருந்து போலும் ஒள்ளிய
நகை என்றுரைத்துக் கொள்க; இதற்கு அ அசை. ஆயிரஞ் சிங்கஞ் சுமந்த
அணையென்றுமாம். (56)

உரைக ளுந்தடு மாறமெய் யுரோமமுஞ் சிலிர்ப்பக்
கரையி றந்தவின் னருட்பெருங் கடலிலன் பென்னுந்
திரையி றந்தவா றீர்த்திட மிதந்துபோய்ச் செப்பின்
வரையி றந்தவா னந்தவா ரமுதைவாய் மடுத்தான்.

     (இ - ள்.) உரைகளும் தடுமாற - சொற்கள் குழற, மெய் உரோமமும்
சிலிர்ப்ப - உடல் புளகம் போர்ப்ப, கரை இறந்த இன் அருள் பெருங்
கடலில் - எல்லையில்லாத இனிய பெரிய அருட்கடலின் கண், அன்பு
என்னும் திரை இறந்த ஆறு ஈர்த்திட - அன்பாகிய அலையில்லாத ஆறு
இழுத்துச் செல்ல, மிதந்து போய் - அதில் மிதந்து சென்று, செப்பின் வரை
இறந்த - சொல்லின் எல்லையைக் கடந்த, ஆனந்த ஆர் அமுதை வாய்
மடுத்தான் - பேரின்பமாகிய அமிழ்தத்தை உண்டான்.

     உரை தடுமாறல் முதலியன அன்பின் மிகுதியால் விளைவன.
மணிவாசகரும் 'அன்பெனும் ஆறு கரையது புரள' என அன்பை ஆறாகக்
கூறினார். கலக்கமற்ற பேரன்பானது இழுத்துச் செல்ல வருத்தமின்றிச் சென்று
இறைவனைக் கண்டு சிவானந்தத்திற்றிளைத்தமையை இங்ஙனம் உருவகித்தார்.
கடலென்றதற்கேற்ப அமுதென்றார்; இதன் நயம் பாராட்டற்பாலது. (57)

தன்பு லன்களுங் கரணமுந் தன்னவே யாக்கி
அன்பு டம்புகொண் டவனெதி ரருட்சிவ லோகம்
பின்பு பண்டுபோன் மதுரையாப் பிராட்டியுந் தானும்
முன்பி ருந்தவா றிருந்தனன் சுந்தர மூர்த்தி.

     (இ - ள்.) தன் புலன்களும் கரணமும் தன்னவே ஆக்கி - தன்
இந்திரியங்களையும் அந்தக் கரணங்களையுந் தன்னுடையனவாகவே செய்து,
அன்பு உடம்பு கொண்டவன் எதிர் - அன்பே வடிவமாகக் கொண்டு நின்ற
வரகுண பாண்டியனெதிரே, அருள் சிவலோகம் - கருணை வடிவமாகிய
சிவலோகமானது, பின்பு பண்டு போல் மதுரையா - பின் முன்பு போல